பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து 3-0 ஒயிட்வாஷ் கொடுத்தது. அத்துடன், ஸ்லோ ஓவர் ரேட், அதாவது குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாமல் தாமதம் செய்ததற்காக புள்ளிகளை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் மே.இ.தீவுகளுக்கும் கீழ் சரிந்து 9-ம் இடத்துக்குச் சரிந்து விட்டதோடு பாகிஸ்தான் அணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
கால அவகாசங்களைக் கணக்கில் எடுத்த பின்னரும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் வகையில் பாகிஸ்தான் அணி 11 ஓவர்கள் குறைவாக வீசியதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணிக்கு 11 புள்ளிகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டதாக ஐசிசி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொடரின் முடிவில் பாகிஸ்தான் அணியிடம் மொத்தம் 5 புள்ளிகள் மட்டுமே (4.63 புள்ளி சதவீதம்) உள்ளன. இதன்மூலம், 30 புள்ளிகளுடன் (20.83 புள்ளி சதவீதம்) 8-வது இடத்தில் உள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியைவிட பாகிஸ்தான் மிகவும் பின்தங்கியுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்தின் தொடக்க டெஸ்ட் போட்டியில் ஹெடிங்லியில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் 8-வது இடத்திலிருந்து 9-வது இடத்துக்கு சரிந்தது.
2025-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தான் அணிக்கு இன்னும் இரண்டு தொடர்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டு நவம்பரில் இலங்கைக்கு எதிராகவும், 2027 மார்ச்சில் நியூசிலாந்துக்கு எதிராகவும் அந்த அணிகள் விளையாட உள்ளன.
இதற்கிடையே, மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு இது மிகவும் மோசமான காலகட்டமாக அமைந்துள்ளது.
இந்த சுழற்சியில் இதுவரை விளையாடிய 9 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்டில் லார்ட்ஸ் மைதானத்தில் 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், பாகிஸ்தான் அணியில் மிகப் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு முகமது ரிஸ்வான், சல்மான் ஆகா, இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட 7 வீரர்கள் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டு சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் பந்துவீச்சுப் பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஸ்லோ ஓவர் ரேட், அபராதம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதலபாதாள இடம் போன்றவை பாகிஸ்தான் கிரிக்கெட்டை மீட்டெடுக்க யாராவது மீட்பர் வரமாட்டார்களா என்ற பெரும் ஏக்கத்தை அந்நாட்டு ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.