விளையாட்டு

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய, தகுதிக்கு வாய்ப்புள்ள அணிகள் எவை?

வேட்டையன்

சென்னை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தச் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறி உள்ளன என்பது குறித்தும், சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள அணிகள் எவை என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. மொத்தம் நான்கு பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவுக்கும் 5 அணிகள் வீதம் முதல் சுற்று ஆட்டங்கள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. நாளொன்றுக்கு 3 ஆட்டங்கள் வீதம் இந்த தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் இதுவரை இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளன. அதே நேரத்தில் நமீபியா, ஓமான், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், உள்ளிட்ட அணிகள் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளன.

          

அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்புள்ள அணிகள் எவை? - சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கெனவே நான்கு அணிகள் முன்னேறிவிட்டன. மீதமுள்ள நான்கு இடத்துக்கு தான் இப்போது போட்டி. அதில் குரூப்-சி பிரிவில் இருந்து மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்டது. இந்தச் சூழலில் குரூப்-ஏ மற்றும் குரூப்-டி பிரிவில் இருந்து தலா ஒரு அணியும், குரூப்-பி பிரிவில் இருந்து இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வேண்டி உள்ளது.

குரூப்-ஏ பிரிவில் இருந்து இந்தியா ஏற்கெனவே ‘சூப்பர்-8’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் இருந்து பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. அந்த அணி கடைசி ஆட்டத்தில் நமீபியாவுடன் விளையாடுகிறது. அதில் வெற்றி பெற்றால் போதும். பாகிஸ்தான் அதில் தோல்வியை தழுவினால் நெட் ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கு அமெரிக்கா முன்னேறும்.

குரூப்-பி பிரிவில் இருந்து இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே வசம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. அதுதான் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் ரேஸில் உள்ளன. இந்த மூன்று அணிகளும் தலா ஆறு புள்ளிகளுடன் குரூப் சுற்றை நிறைவு செய்ய வாய்ப்புள்ளது.

அப்படி இருக்கும் சூழலில் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் முதல் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

இன்று (பிப்.16) இலங்கையுடன் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அதில் தோல்வியை தழுவினால் முதல் சுற்றோடு நடையை கட்டவும் வாய்ப்புள்ளது. அது நடந்தால் ஜிம்பாப்வே அணி விளையாடும் கடைசி இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைய வேண்டும். அது நடந்தால் ஆஸ்திரேலியா அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இலங்கை அணியும் முதல் சுற்றில் ஆஸி மற்றும் ஜிம்பாப்வே உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். அது நடக்காத பட்சத்தில் கடைசி நேர திருப்பம் இந்த குரூப்பில் ஏற்பட வாய்ப்புள்ளது.

குரூப்-டி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா ஏற்கெனவே முன்னேறிவிட்டது. அந்த வகையில் நியுசிலாந்து அணி, கனடாவை வீழ்த்தினால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும். அந்த ஆட்டத்தின் முடிவு நியூஸிலாந்துக்கு எதிராக அமைந்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேற ஆப்கானிஸ்தானுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதற்கு கனடாவுக்கு எதிராக அபார வெற்றியை ஆப்கன் பெற வேண்டும்.

SCROLL FOR NEXT