விளையாட்டு

இலங்​கைக்கு எதி​ரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்​டி​யில் இந்​திய அணி அபார வெற்றி

செய்திப்பிரிவு

காலே: இலங்கை - இந்​தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 462 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 167, கே.எல்​.​ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்​கள் விளாசினர்.

அதேவேளை​யில் இலங்கை அணி 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சோனல் தினுஷா 100, நிரோஷன் திக்​வெல்லா 80 ரன்​கள் சேர்த்​தனர். 178 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 48.5 ஓவர்​களில் 193 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ரிஷப் பந்த் 66, தேவ்​தத் படிக்​கல் 44, கே.எல்​.​ராகுல் 35 ரன்​கள் சேர்த்​தனர்.

372 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 34 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 84 ரன்​கள் எடுத்​தது. நிஷான் மதுஷ்கா பெர்​னாண்டோ 6, பசிந்து சூரியபண்​டாரா 0, கமிந்து மெண்​டிஸ் 2, லகிரு உதரா 16 ரன்​களில் நடையை கட்​டினர். கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்வா 31, சோனல் தினுஷா 25 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளை​யாடியது. தனது 20-வது அரை சதத்தை கடந்த தனஞ்​ஜெயா டி சில்வா 151 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளை​யாடி​னார். அப்​போது பந்து மட்டை விளிம்​பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசை​யில் நின்ற மானவ் சுதா​ரிடம் கேட்ச் ஆனது.

5-வது விக்​கெட்​டுக்கு இந்த ஜோடி 202 பந்​துகளை எதிர்​கொண்டு 95 ரன்​கள் சேர்த்​தது. இதையடுத்து களமிறங்​கிய நிரோஷன் திக்​வெல்லா 17 பந்​துகளில், ஒரு பவுண்​டரி​யுடன் 10 ரன்​கள் எடுத்த நிலை​யில் பிரசித் கிருஷ்ணா பந்​தில் ரிஷப் பந்த்​திடம் கேட்ச் கொடுத்து வெளி​யேறி​னார். சீராக ரன்​கள் சேர்த்த சோனல் தினுஷா தனது 2-வது அரை சதத்தை கடந்த நிலை​யில் 128 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 8 பவுண்​டரிகளு​டன் 84 ரன்​கள் எடுத்த நிலை​யில் மானவ் சுதார் வீசிய 75-வது ஓவரின் முதல் பந்​தில் லெக் சிலிப் திசை​யில் நின்ற துருவ் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார்.

இதே ஓவரில் பிர​பாத் ஜெயசூரியா (0), லகிரு குமரா (0) ஆகியோரை​யும் பெவிலியனுக்கு திருப்​பி​னார் மானவ் சுதார். தொடர்ந்து தனது அடுத்த ஓவரில் கேஷரா நுவந்​தாவை (20) போல்​டாக்​கி​னார் மானவ் சுதார். முடி​வில் இலங்கை அணி 77.4 ஓவர்​களில் 206 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதனால் இந்​திய அணி 165 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்​திய அணி தரப்​பில் மானவ் சுதார் 23.4 ஓவர்​களை வீசி, 2 மெய்​டன்​களு​டன், 55 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

பிரசித் கிருஷ்ணா 2 விக்​கெட்​களை​யும் முகமது சிராஜ், ரவீந்​திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். ஆட்ட நாயக​னாக இந்​திய அணி​யின் பேட்​ஸ்​மேன் தேவ்​தத் படிக்​கல் தேர்​வா​னார். அவர், முதல் இன்​னிங்​ஸில் 167 ரன்​களும், 2-வது இன்​னிங்​ஸில் 44 ரன்​களும் சேர்த்​திருந்​தார்.

இந்த வெற்​றி​யின் மூலம் 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்​திய அணி 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. கடைசி மற்​றும் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி கொழும்பு நகரில் தொடங்​கு​கிறது.

11-ல் ஒரு வெற்றி கூட இல்லை

இந்​தி​யா​வுக்கு எதி​ரான காலே டெஸ்ட் போட்​டி​யில் இலங்கை அணி 165 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இந்​திய அணிக்கு எதி​ராக இலங்கை கடைசி​யாக விளை​யாடிய 11 டெஸ்ட் போட்​டிகளில் ஒன்​றில் கூட வெற்றி பெற​வில்​லை. இதில் 9 தோல்வி​களும் அடங்​கும்.

12 புள்​ளி​களை அள்​ளியது

இலங்கை அணிக்கு எதி ரான காலே டெஸ்ட் போட்டியின் வெற்​றி​யால் இந்​திய அணி முழு​மை​யாக 12 புள்​ளி​களை பெற்​றது. நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் சுழற்​சி​யில் இது​வரை 10 டெஸ்ட் போட்​டிகளில் விளை​யாடி உள்ள இந்​திய அணி 5 வெற்​றி, 4 தோல்​வி, ஒரு டிரா​வுடன் 53.33 சதவீத புள்​ளி​களு​டன் பட்​டியலில் 5-வது இடத்​தில் தொடர்​கிறது.

கொட்டி தீர்த்த மழை

போட்டி முடிவடைந்த அடுத்த 5 நிமிடங்​களில் கன மழை பெய்​தது. இதனால் இந்​திய அணி பெரு​மூச்​சு​விட்​டது. ஒரு​வேளை மழை முன்​ன​தாக பெய்​திருந்​தால் அது போட்​டியை வெகு​வாக பாதித்து இருக்​கக்​கூடும்.

தன்​னம்​பிக்கை

சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மான ஆடு​களங்​களில் சொந்த நாட்​டில் நியூஸிலாந்து மற்​றும் தென் ஆப்​பிரிக்கா அணி​களுக்கு எதி​ராக தோல்வி​களை சந்​தித்​திருந்த இந்​திய அணிக்​கு, பாரம்​பரிய​மாக சுழற்​பந்து வீச்​சுக்கு பெயர் பெற்ற காலே மைதானத்​தில் தற்​போது கிடைத்​துள்ள வெற்றி மிகப்​பெரிய தன்​னம்​பிக்​கையை கொடுக்​கக்​கூடும்.

7-வது இந்​திய சுழற்​பந்து வீச்​சாளர்

இலங்கை அணிக்கு எதி​ரான காலே டெஸ்ட் போட்​டி​யில் இந்​திய அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான மானவ் சுதார் முதல் இன்​னிங்​ஸில் 4 விக்​கெட்​களை​யும், 2-வது இன்​னிங்​ஸில் 6 விக்​கெட்​களை​யும் என கூட்​டாக 10 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். இதன் மூலம் வெளி​நாட்டு டெஸ்ட் போட்டி ஒன்​றில் 10 விக்​கெட்​களை வீழ்த்​திய 7-வது இந்​திய சுழற்​பந்து வீச்​சாளர் என்ற பெரு​மையை மானவ் சுதார் பெற்​றார்.

இதற்கு முன்​னர் இந்த சாதனையை ரவிச்​சந்​திரன் அஸ்​வின், பிஷன் சிங் பேடி, எரப்​பள்ளி பிரசன்​னா, பகவத் சந்​திரசேகர், அனில் கும்ப்​ளே, ஹர்​பஜன் சிங் ஆகியோர் நிகழ்த்தி உள்​ளனர். இதில் அஸ்​வின் இரு முறை 10 விக்​கெட்​களை வீழ்த்​தி​யிருந்​தார்.

28-ல் 27 முடிவு​கள்

காலே மைதானத்​தில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடை​பெற்​றுள்ள 28 டெஸ்ட் போட்​டிகளில் ஒரே ஒரு போட்டி மட்​டுமே (2025-ம் ஆண்டு இலங்கை - வங்​கதேசம்) மழை காரண​மாக பாதிக்​கப்​பட்டு டிரா​வில் முடிவடைந்​தது. மற்​றபடி 27 போட்​டிகளி​லும் முடிவு கிடைத்திருந்தது.

இந்​தி​யா​வின் 600-வது டெஸ்ட்

இலங்கை அணிக்கு எதி​ராக காலே​வில் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சர்​வ​தேச டெஸ்ட் அரங்​கில் இந்​திய அணிக்கு 600-வது போட்​டி​யாக அமைந்​திருந்தது. இந்த பயணத்​தில் இந்​திய அணி 187 வெற்​றி, 188 தோல்​வி, 224 டிரா மற்​றும் ஒரு ‘டை’ (1986-ம் ஆண்டு சென்​னை​யில் ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான போட்​டி) ஆகிய​வற்றை பதிவு செய்​துள்​ளது.

‘பேட்​டிங் செய்​வது எளிதல்ல’

தோல்வி குறித்து இலங்கை அணி​யின் கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்வா கூறும்​போது, “கடைசி இன்​னிங்​ஸில் வீரர்​கள் கடுமை​யாகப் போராடி​னார்​கள். இது அவ்​வளவு எளி​தானது அல்ல. காலே ஆடு​களம் முதல் மூன்று நாட்​களுக்கு பேட்​டிங் செய்ய நன்​றாக இருந்​தது. ஆனால், நான்​காவது இன்​னிங்​ஸில் பேட்​டிங் செய்​வது எளி​தாக இருக்​காது என்​பது அனை​வருக்​கும் தெரி​யும்.

கே.எல். ராகுலும், தேவ்​தத் படிக்​கல்​லும் அமைத்த தொடக்​கத்தை பெரிய ரன்​களாக மாற்​றி, அங்​கிருந்தே எங்​கள் மீது அழுத்​தத்தை ஏற்​படுத்​தி​னார்​கள். ஆட்​டத்​தின் முடி​வில் டாஸ் முக்​கிய பங்கு வகித்​திருக்​கலாம். ஏனெனில், இந்​திய அணி டாஸ் வென்று பெரிய ஸ்கோரைக் குவித்தது. நாங்​கள்​ பேட்​டிங்​ செய்​த ​போது தொடக்​கத்​திலேயே விக்​கெட்​டு​களை இழந்​து​விட்​ட​தால்​, அங்​கிருந்​து பின்​னடைவைச்​ சந்​தித்​தோம்​” என்​றார்​.

‘மானவ் சுதார் நீண்ட காலம் விளை​யாடு​வார்’

இந்​திய அணி​யின் கேப்​டன் ஷுப்​மன் கில் கூறும்​போது, “மானவ் சுதார் சிறப்​பாக பந்​து​வீசி வரு​கிறார். மிக​வும் திறமை​யான, நம்​பிக்​கையளிக்​கும் வீர​ராக​வும், இந்​திய அணிக்​காக நீண்ட காலம் விளை​யாடக்​கூடிய வீர​ராக​வும் தெரி​கிறார். தேவ்​தத் படிக்​கலின் பேட்​டிங்​கைப் பார்ப்பதற்கு அற்​புத​மாக இருந்​தது. சதங்​களை அடிப்​பது முக்​கி​யம் தான், ஆனால் சதம் அடித்த பிறகும் அவர், ஒரு பெரிய ஸ்கோரைக் குவித்​தார்.

போட்டி குணம் நிறைந்த ஆட்​டத்​தில், அணி வசதி​யான நிலை​யில் இருக்​கும்​போது தேவ்​தத் படிக்​கல் பேட்​டிங் செய்த வித​மும், நெருக்​கடி​யான இரண்​டாவது இன்​னிங்​ஸில் ஆதிக்​கம் செலுத்​தி​யதும் பார்ப்​ப​தற்​குச் சிறப்​பாக இருந்​தது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் இறு​திப்​போட்​டிக்கு முன்​னேறுவதே எங்​களின் இலக்​காகும். டெஸ்ட் போட்​டிகளில் வெற்றி பெறு​வது எளி​தானதல்ல, எனவே இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்​சி​யளிக்​கிறது.

இது எங்​களுக்கு மிக​வும் திருப்​தி​யளிக்​கும் ஒரு வெற்​றி​யாகும். நாங்​கள் வசதி​யான நிலை​யில் தான் இருந்​தோம், ஆனால் வானிலை காரண​மாக போட்டி தொடர்ந்து நடை​பெறுமா என்​ப​தில் நிச்​ச​யம் இல்​லாமல் இருந்​தது. இருப்​பினும் வீரர்​கள் அதற்கு தகுந்​த​வாறு செயல்​பட்​டனர்​” என்​றார்​.

SCROLL FOR NEXT