விளையாட்டு

குவாஹாட்டியில் இன்று 2-வது டெஸ்ட் தொடக்கம்: வெற்றி நெருக்கடியுடன் களமிறங்குகிறது இந்தியா

செய்திப்பிரிவு

குவாஹாட்டி: இந்​தியா - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி குவாஹாட்​டி​யில் உள்ள பர்​சபரா மைதானத்​தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்​கு​கிறது.

இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் கொல்​கத்​தா​வில் நடை​பெற்ற முதல் போட்​டி​யில் இந்​திய அணி 124 ரன்​கள் இலக்கை எட்ட முடி​யாமல் 30 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. இதனால் தொடரில் 0-1 என இந்​திய அணி பின்​தங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில் 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி குவாஹாட்​டி​யில் உள்ள பர்​சபரா மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது.

இந்த போட்​டி​யில் வெற்றி பெற்​றால் மட்​டுமே தொடரை சமன் செய்ய முடி​யும் என்ற நெருக்​கடி​யுடன் இந்​திய அணி களமிறங்​கு​கிறது. கழுத்து பகு​தி​யில் காயம் அடைந்த ஷுப்​மன் கில் அணி​யி​ல் இருந்து விடுவிக்​கப்​பட்​டுள்​ளார். இதனால் ரிஷப் பந்த் முதன்​முறை​யாக முழுநேர கேப்​ட​னாக செயல்பட உள்​ளார். ஷுப்​மன் கில் இடத்​தில் சாய் சுதர்​சன் களமிறக்​கப்​படக்​கூடும். இதே​போன்று அக்​சர் படேல் அல்​லது குல்​தீப் யாதவ் நீக்​கப்​பட்டு நிதிஷ் குமார் ரெட்டி சேர்க்​கப்பட வாய்ப்பு உள்​ளது.

கொல்​கத்தா போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் சுழற்​பந்து வீச்​சாள​ரான சைமன் ஹார்​மர் பந்​தில் இந்​திய பேட்​டிங் வரிசை ஆட்​டம் கண்​டிருந்​தது. சொந்த மண்​ணில் கடைசி​யாக நடை​பெற்ற 6 டெஸ்ட் போட்​டிகளில் இந்​திய அணி 4 ஆட்​டங்​களில் சுழற்​பந்து வீச்சை சரி​யாக கையாள முடி​யாமல் தோல்​வியை சந்​தித்​துள்​ளது.

இதனால் சுழற்​பந்து வீச்சை அணுகு​வ​தில் இந்​திய பேட்​ஸ்​மேன்​கள் தொழில்​நுட்​பரீ​தி​யாக தங்​களது ஆட்ட நுணுக்​கங்​களை மாற்றி அமைப்​ப​தி​லும் கவனம் செலுத்​தக்​கூடும். மேலும் முதல் போட்​டி​யில் அனைத்து பேட்​ஸ்​மேன்​களுமே அவசரக​தி​யில் விளை​யாடி விக்​கெட்​களை பறி​கொடுத்​தனர். இதனால் களத்​தில் நேரத்தை செல​விட்டு ரன்​களை சேர்க்க இந்​திய அணி வீரர்​கள் முயற்​சிக்​கக்​கூடும்.

உலக டெஸ்ட் சாம்​பிய​னான தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி முதல் போட்​டி​யில் வெற்றி பெற்ற உற்​சாகத்​தில் களமிறங்​கு​கிறது. அந்த அணி இந்த போட்​டியை டிரா​வில் முடித்​தாலே டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்​து​விடும். சுழற்​பந்து வீச்​சில் சைமன் ஹார்​மர், கேசவ் மஹா​ராஜ் கூட்​டணி மீண்​டும் ஒரு முறை இந்​திய பேட்​ஸ்​மேன்​களுக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். இவர்​களுக்கு உறு​துணை​யாக வேகப்​பந்து வீச்​சில் மார்கோ யான்​சன் செயல்​படக்​கூடும்.

முதல் டெஸ்​டில் முக்​கிய​மான கட்​டத்​தில் அரை சதம் அடித்த தெம்பா பவு​மா, அவருக்கு உறு​துணை​யாக செயல்​பட்ட ஆல்​ர​வுண்​டர் கார்​பின் போஷ் ஆகியோரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். ரியான் ரிக்​கெல்​டன், எய்​டன் மார்க்​ரம், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், வி​யான் முல்​டர், டோனி டி ஸோர்​ஸி, கைல் வெர்​ரெய்ன் ஆகியோ​ரும் பொறுப்​புடன் விளை​யாடி ரன்​கள்​ சேர்த்​தால்​ அணி​யின்​ பலம்​ அ​திகரிக்​கும்.

ஆடுகளம் எப்படி? - குவாஹாட்டி பர்சபாரா மைதானத்தில் முதன்முறையாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இங்குள்ள ஆடுகளம் சிவப்பு மண் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் கணிசமாக புற்கள் உள்ளன. இந்த புற்கள் நீக்கப்பட்டால் பந்துகள் அதிக அளவில் சுழலும். மாறாக புற்கள் அப்படியே விடப்பட்டால் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும்.

அனுபவம் இல்லாத ரிஷப் பந்த்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்த உள்ள ரிஷப் பந்த்துக்கு கேப்டனாக போதிய அனுபவம் இல்லை. இது முதல் டெஸ்ட் போட்டியில் நன்கு வெளிப்பட்டது. ஏனெனில் 2-வது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது நாள் ஆட்டத்தின் இறுதியில் 93 ரன்களுக்கு 7 விக்கெட்களை பறிகொடுத்து இருந்தது. ஆனால் 3-வது நாள் ஆட்டத்தை ரிஷப் பந்த், வேகப்பந்து வீச்சாளர்கள் கொண்டு தொடங்கினார். இதன் பின்னர் தெம்பா பவுமா, பின்வரிசை வீரர்களின் துணையுடன் 60 ரன்கள் கூடுதலாக சேர்த்தார். இது போட்டியின் முடிவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரபாடா விலகல்: விலா எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான காகிசோ ரபாடா கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை. இந்நிலையில் காயத்தில் இருந்து குணமடையாததால் அவர், 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

SCROLL FOR NEXT