இந்திய அணி வீரர்கள் | கோப்புப்படம்
புதுடெல்லி: 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக அந்நாட்டில் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 2027-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி முதல் நவம்பர் 21-ம் தேதி வரை தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய 3 நாடுகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க்கும் இந்திய அணி வீரர்களை தயார்படுத்தும் பணிகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோர் இத்தகைய தொடர் ஒன்றை நடத்தக் கோரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அமைப்புடன் பிசிசிஐ பேச்சுவார்த்தையை தொடங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்தத் தொடரில் 4 அல்லது 6 ஒரு நாள் போட்டிகள் நடத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணங்கள் குறித்து பிசிசிஐ இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை. எனவே, தென் ஆப்பிரிக்கா அணியுடனான தொடரை ஏற்பாடு செய்வதற்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒரு நாள் தொடர் நடைபெறும் தேதிகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.