விளையாட்டு

ஆப்கனுக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணித் தேர்வும் சில கேள்விகளும்!

ஆர்.முத்துக்குமார்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூ சண்டிகரில் நடைபெறும் ஒரே டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணித் தேர்வு சில பல பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தாலும், அணித்தேர்வு நோக்கத்தின் மீது சில சந்தேகங்கள் எழவே செய்கின்றன.

அணியில் சாய் சுதர்ஷனின் இடம் நிச்சயம் கேள்விக்குறியே. ஐபிஎல் தொடர்களை வைத்து டெஸ்ட் தேர்வு செய்யக் கூடாது, அப்படி செய்ய மாட்டோம் என்றெல்லாம் வாய்ப்பூச்சுப் பூசும் பிசிசிஐ உண்மையில் ஐபிஎல் அடிப்படையில்தான் அணியில் தேர்வு செய்கிறது. அதிலும் முரண்பாடு உள்ளது.

உதாரணமாக சாய் சுதர்ஷனுக்குப் பதில் தேவ்தத் படிக்கல்தான் இடம்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், இவரும் ஐபிஎல் தொடரில் அசத்தினார். மேலும், சாய் சுதர்ஷனுக்கு இல்லாத ஒரு கிரெடிட் தேவ்தத் படிக்கல்லுக்கு என்ன இருக்கிறது என்றால் உள்நாட்டுத் தொடர்களில் வெளுத்து வாங்கியுள்ளார் படிக்கல்.

பிறகு ஏன் சாய் சுதர்ஷன்?

‘மெரிட்தான் பேசும்’ என்று பேசப்பட்டு வரும் ஒரு சமூக/பண்பாட்டுச் சூழலில் ‘மெரிட்’ நிரூபிக்கப்படாமலேயே சாய் சுதர்ஷன் அணியில் இடம்பெற்றது எப்படி? தேவ்தத் படிக்கல் நிச்சயமாக மெரிட் இருந்தும் ஏன் ஓரங்கட்டப்படுகிறார் என்பதும் கேள்விக்குறியே. ஐபிஎல் தொடர்களிலேயே 3 முறை அதுவும் அடுத்தடுத்து மட்டை கையில் நிற்காமல் பறந்து போய் ஸ்டம்பில் விழுந்து ஹிட் விக்கெட் ஆனவர் என்ன அடிப்படையில் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படுகிறார்? என்ன அடிப்படையில் படிக்கல் ஒதுக்கப்படுகிறார்?

கேப்டன் ஷுப்மன் கில் ஒரு பெரிய குஜராத் டைட்டன்ஸ் லாபி. இது தெரிந்த விஷயம்தான், ஆனால், அவர் பேட்டிங்கில் நிரூபித்து வருகிறார். கேப்டன்சியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு டெஸ்ட்டில் தோற்றார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவருக்குப் பதிலாக ரிஷப் பந்த் கேப்டனாகித் தோற்றார். இங்கிலாந்தில் தொடரை கில் 2-2 என்று ட்ரா செய்தார். ஆனால், அது வெற்றி பெற்றிருக்க வேண்டிய தொடர்.

ஆகவே ஷுப்மன் கில், குஜராத் டைட்டன்ஸ், சாய் சுதர்ஷன் குஜராத் டைட்டன்ஸ், அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடது கை ஸ்பின் ஆல்ரவுண்டர் மானவ் சுதர் என்பவரும் குஜராத் டைட்டன்ஸ். ஏன் இதற்கு முன்பாக அணியில் கம்பீர் தேர்வு செய்த ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் என்ன ஆனார்?

மேலும், 2024-25 ரஞ்சி சீசனில் 10 போட்டிகளில் 69 விக்கெட்டுகளை 16.98 என்ற சராசரியில் எடுத்து இந்திய அணி கதவினை தட்டி வரும் ஹர்ஷ் துபே ஏன் செலக்‌ஷனில் பரிசீலிக்கப்படவில்லை? 2025-26 ரஞ்சி சீசனில் 23.14 என்ற சராசரியில் 48 விக்கெட்டுகளை எடுத்த ஸ்ரேயஸ் கோபால் ஏன் பரிசீலிக்கப்படவில்லை. எங்கிருந்து வந்தார் இந்த மானவ் சுதர். பார்த்தால் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருக்கிறார். அந்த செட்-அப்பில் இருக்கிறாரே தவிர ஐபிஎல் போட்டிகளிலும் சரியாக வாய்ப்பளிக்கப்படவில்லை. என்ன அடிப்படையில் இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்?

இவற்றையெல்லாம் விட பெரிய கேள்வி ஒரு அணியில் மூன்று விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். ராகுல், ரிஷப் பந்த், துருவ் ஜுரெல். என்ன இது கேலிக்கூத்து? ஏன் துருவ் ஜுரெலுக்குப் பதில் தேவ்தத் படிக்கல்லை தேர்வு செய்திருக்கலாமே.

ரவி சாஸ்திரி - விராட் கோலி காலக்கட்டத்திலும், ரோஹித் சர்மா - ராகுல் திராவிட் காலக்கட்டத்திலும் ஏற்படாத செலக்‌ஷன் சந்தேகங்கள், கேள்விகள் கம்பீர் - கில் காலக்கட்டத்தில் எழுவது எதேச்சையானது அல்ல. சர்பராஸ் கானை ஒழித்தது, கருண் நாயரை தேவையில்லாமல் அணியில் எடுத்து அவரை ஒழித்தது என்று கம்பீரின் அணித்தேர்வு கோலாகலங்கள் தொடர்வது இந்திய டெஸ்ட் அணிக்கு நல்லதல்ல.

SCROLL FOR NEXT