குவாஹாட்டி: இந்தியா - நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி குவாஹாட்டியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும்.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. நேற்று முன்தினம் ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதன் மூலம் இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை வக்கிறது. இந்நிலையில் 3-வது ஆட்டம் குவாஹாட்டியில் இன்று நடைபெறுகிறது.
2-வது போட்டியில் 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 15.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.
இஷான் கிஷன் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளடன் 76 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் நெருக்கடியுடன் களமிறங்குகிறார். அவரது தொடக்க இடத்துக்காக ஷுப்மன் கில், டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆனால் உலகக் கோப்பை தொடருக்கு பயிற்சியாக அமைந்துள்ள நியூஸிலாந்து தொடரில் சஞ்சு சாம்சன் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.
முதல் ஆட்டத்தில் 10 ரன்களிலும், 2-வது ஆட்டத்தில் 6 ரன்களிலும் வெளியேறிய சஞ்சு சாம்சன் தனது இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால் கணிசமான அளவில் ரன்கள் குவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதிவேகத்தில் வீசப்படும் பந்துகளை கட்டுப்பாடு இல்லாமல் விளையாடி சஞ்சு சாம்சன் ஆட்டமிழப்பது வாடிக்கையாக மாறி உள்ளது.
இந்த ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் 5 முறை வேகப்பந்து வீச்சில் ஆட்டமிழந்து இருந்தார். தற்போதைய தொடரிலும் அவர், கைல் ஜேமிசன் மற்றும் மேட் ஹென்றியிடம் ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பை நெருங்குவதால் இந்த பலவீனத்தில் இருந்து மீள்வதற்கான வழிகளை சஞ்சு சாம்சன் கண்டறியக்கூடும்.
மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி தொடரில் 0-2 என பின்தங்கி உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். 2-வது போட்டியில் நியூஸிலாந்து அணியின் பீல்டிங் மோசமாக அமைந்திருந்தது. மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டென் கான்வே ஆகியோர் முக்கியமான கட்டங்களில் கேட்ச்களை தவறவிட்டு இருந்தனர். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நியூஸிலாந்து அணி அனைத்து துறையிலும் மேம்பட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும்.