விளையாட்டு

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த அயர்லாந்து கிரிக்கெட் அணி: டி20 தொடரை 2-0 என வென்றது

வேட்டையன்

பெல்பாஸ்ட்: இந்திய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றுள்ளது அயர்லாந்து கிரிக்கெட் அணி.

இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. கடந்த 26-ம் தேதி இந்த தொடரின் முதல் ஆட்டம் நடைபெற்றது. இதில் அயர்லாந்து அணி 34 ரன்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 28) மாலை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அயர்லாந்து அணி முதல் இன்னிங்ஸில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் 47 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார் ஹாரி டெக்டர். 37 ரன்கள் எடுத்தார் பெஞ்சமின்.

இந்திய அணி சார்பில் பிரின்ஸ் யாதவ் 3 விக்கெட், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட், ஹர்ஷித் ராணா 1 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்திய அணி விரட்டியது.

இன்னிங்ஸின் முதல் ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதே ஓவரின் நான்காவது பந்தில் அபிஷேக் சர்மாவும் வெளியேறினார். ஒரே ஓவரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ரன் ஏதுமின்றி வெளியேறி ஏமாற்றம் தந்தனர். இது இந்திய அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

தொடர்ச்சியாக இந்திய அணியின் விக்கெட்டுகள் சரிந்தன. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 10, இஷான் கிஷன் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இந்திய அணி 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அக்சர் படேலும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். துபே 20 ரன்கள் எடுத்தார்.

சவாலான தருணத்தில் நேர்த்தியாக பேட் செய்து 46 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார் திலக் வர்மா. 121 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. அணியின் பிரதான பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டமிழந்த நிலையில் 10 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார் ஹர்ஷித் ராணா. கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் அவர் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 18 ரன்கள் எடுக்க முடிந்தது. இதில் அயர்லந்து அணி கொடுத்த உதிரி ரன்களும் அடங்கும். கடைசி பந்தில் பிரின்ஸ் யாதவ் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் 1 ரன்னில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது.

அயர்லாந்து சார்பில் மேத்யூ ஹோலார்ட் மற்றும் ஜெய் முன்ட்ரா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். இந்த ஆட்டம் மற்றும் தொடரின் நாயகனாக ஜெய் முன்ட்ரா அறிவிக்கப்பட்டார். அவருக்கு இது அறிமுக சர்வதேச கிரிக்கெட் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடர் வெற்றிநடை முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ச்சியாக 16 தொடர்களில் இந்தியா இதற்கு முன்பு வெற்றி பெற்றிருந்தது.

மேலும், இந்திய டி20 அணியின் முழு நேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷ்ரேயஸ் ஐயர், தனது தலைமையிலான முதல் தொடரை இழந்துள்ளார். அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. அதில் வெற்றிப் பாதைக்கு இந்தியா திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT