இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல்
வெலிங்டன்: நியூஸிலாந்து - இந்தியா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 121 ஓவர்களில் 368 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 175, கிளென் பிலிப்ஸ் 118 ரன்கள் விளாசினர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 52, தேவ்தத் படிக்கல் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.
கே.எல்.ராகுலும், தேவ்தத் படிக்கலும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். பொறுமையாக விளையாடிய கே.எல்.ராகுல் 207 பந்துகளில், 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் தனது 13-வது சதத்தை விளாசினார். இது வௌிநாடுகளில் அவர் அடித்த 10-வது சதமாகவும் அமைந்தது. கிளென் பிலிப்ஸ் வீசிய 63-வது ஓவரின் 3-வது பந்தை கே.எல்.ராகுல் லாங் ஆன் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 175 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் விளாசிய நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு தேவ்தத் படிக்கல், கே.எல்.ராகுல் ஜோடி 337 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடினார். ஜேக்கப் டஃபி வீசிய 101-வது ஓவரின் 3-வது பந்தை ஷுப்மன் கில், ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸருக்கு விளாசினார்.
இந்த சிக்ஸரால் இந்திய அணி 368 ரன்களை கடந்து முன்னிலை பெறத் தொடங்கியது. நிதானமாக விளையாடி வந்த கே.எல்.ராகுல் 290 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 136 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் ஸ்மித் பந்தில் போல்டானார். அப்போது ஸ்கோர் 103.3 ஓவர்களில் 386 ஆக இருந்தது. 3-வது விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் ஜோடி 126 பந்துகளில், 91 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த், தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு ரன்கள் வேட்டையாடினார். கிளென் பிலிப்ஸ் வீசிய 115-வது ஓவரில் ஷுப்மன் கில் மிட் ஆஃப் திசையில் சிக்ஸர் ஒன்றை விளாசினார். அதேவேளையில் ஜேக்கப் டஃபி வீசிய 121-வது ஓவரின் கடைசி 2 பந்துகளையும் ரிஷப் பந்த் லெக் திசையில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார்.
மட்டையை சுழற்றிய ரிஷப் பந்த் 55 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் தனது 22-வது அரை சதத்தை கடந்தார். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3-வது நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஷுப்மன் கில், ஜேக்கப் டஃபி பந்தில் போல்டானார். 146 பந்துகளை சந்தித்த ஷுப்மன் கில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் விளாசினார். 4-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில், ரிஷப் பந்த் ஜோடி 129 பந்துகளில், 100 ரன்கள் குவித்தது.
இதையடுத்து அன்ஷுல் கம்போஜ் களமிறங்கினார். 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 125 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 486 ரன்கள் குவித்தது. ரிஷப் பந்த் 55 ரன்களுடனும், அன்ஷுல் கம்போஜ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், ஜேக்கப் டஃபி, நேதன் ஸ்மித் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 118 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.
சேனா நாடுகளில் சாதனை
நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் சதம் அடித்தார். இதன் மூலம் ‘சேனா நாடுகள்’ என அழைக்கப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளிலும் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்தார்.
34 வயதான ராகுல், நியூஸிலாந்து மண்ணில் விளையாடிய தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒட்டுமொத்தமாக சேனா நாடுகளில் அவர், அடித்துள்ள 8-வது டெஸ்ட் சதம் இதுவாகும்.
மேலும், சேனா நாடுகள் அனைத்திலும் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றார். இதற்கு முன்பு முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட், விராட் கோலி ஆகியோர் இந்தச் சாதனையை படைத்திருந்தனர். இந்திய வீரர்களைத் தவிர இலங்கையின் குமார் சங்கக்கரா, பாகிஸ்தானின் சயீத் அன்வர், யூனுஸ் கான் ஆகியோரும் சேனா நாடுகள் அனைத்திலும் டெஸ்ட் சதம் அடித்திருந்தனர்.