முலான்பூர் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்
முலான்பூர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முலான்பூர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் சேர்த்து இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. முலான்பூரில் இன்று (சனிக்கிழமை) டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
இந்திய அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். ஜெய்ஸ்வால், 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த சாய் சுதர்சனுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ராகுல். 104 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து சாய் சுதர்சன் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களத்துக்கு கேப்டன் ஷுப்மன் கில் வந்தார்.
அவருடன் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ராகுல். அதேவேளையில் தனது 12-வது டெஸ்ட் சதத்தை ராகுல் பதிவு செய்தார். சதம் விளாசிய அடுத்த பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 165 பந்துகளில் 100 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
அதன் பின்னர் ரிஷப் பந்த் களத்துக்கு வந்தார். இது அவருக்கு 50-வது டெஸ்ட் போட்டியாக அமைந்தது. அவருடன் இணைந்து 121* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேப்டன் ஷுப்மன் கில்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில், 143 பந்துகளில் 103 ரன்கள் உடன் களத்தில் உள்ளார். மறுமுனையில் ரிஷப் பந்த், 70 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார்.