திருவனந்தபுரம்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 46 ரன்களில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் இஷான் கிஷன் சதம் விளாசினார், அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த ஆட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ், 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேப்டன் சூர்யகுமார், 30 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். அதிரடியாக ஆடிய இஷான் கிஷன், 43 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். 6 ஃபோர்கள் மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 8 மற்றும் ஷிவம் துபே 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
272 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. அந்த அணிக்காக ஆடிய ஃபின் ஆலன் 38 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரச்சின் 30, டேரில் மிட்செல் 26 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஓவர்களில் ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது நியூஸிலாந்து. அதன் மூலம் இந்தியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. மொத்தத்தில் இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் தொடங்க உள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.