இந்திய கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல்

 
விளையாட்டு

சுழற்பந்து வீச்சை கையாளும் விதம்: தேவ்தத் படிக்கல்லின் சூப்பர் டெக்னிக்

ஆர்.முத்துக்குமார்

இந்திய கிரிக்கெட் வீரர் தேவ்தத் படிக்கல் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக 2-வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இலங்கை ஸ்பின்னர்களுக்கோ, வேகப்பந்து வீச்சாளர்களுக்கோ அவரது விக்கெட்டை வீழ்த்தும் விதம் கைகூடவில்லை.

படிக்கல் பேட்டிங்கின் விசேஷம் என்னவெனில் அவர் நல்ல பந்துகளையும் ரன் எடுக்கும் வாய்ப்புகளாக மாற்றிக் கொள்கிறார். ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக மிகத்துல்லியமாக பின்னால் சென்று ஆடும் உத்தி மிகவும் ரிஸ்க் நிறைந்தது என்றாலும் படிக்கல் ஆடும் விதத்தில் அது அவருக்கு ஒரு கைவந்த கலையாக இருப்பதையே உணர்த்துகிறது.

ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக தன் பேட்டிங் கிரீஸின் அகல நீளத்தை அற்புதமாகப் பயன்படுத்துகிறார் படிக்கல். டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பந்துகளுக்காக காத்திருந்தால் ஒரு நாள் முழுதும் அது கிடைக்காமலே போகலாம், எனவே நல்ல பந்துகளில் ஸ்கோர் செய்யும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதுதான் உண்மையான டெஸ்ட் பேட்டரின் லட்சணம். இந்த குணாம்சம் படிக்கல்லிடம் நன்றாகக் கைவந்துள்ளது.

இப்போது போட்டி நடைபெறும் கொழும்பின் எஸ்.எஸ்.சி மைதானத்தில் படிக்கல் அடித்த இந்த 117 ரன்களில் பாதி ரன்கள் ஸ்பின்னர்களை பின் காலில் சென்று ஆடி ஸ்கோர் செய்ததுதான். கிரிக் இன்போ டெக்னிக்கல் புள்ளி விவரங்களின் படி 47 ரன்கள் குட் லெந்த் பந்துகளில் அவர் எடுத்ததே. இது ஒரு அபூர்வமான திறமையைப் பறைசாற்றுகிறது.

பின் காலில் சென்று சிறப்பாக தடுத்தாடி ஸ்பின்னை ஒன்றுமில்லாமல் செய்வதோடு கட், லேட் கட், புல் ஷாட், பேக் ஃபுட் பஞ்ச் என்று ரன் ஸ்கோரிங் ஷாட்களையும் திறம்படப் பயன்படுத்துகிறார்.

படிக்கல் ஒரு துடிப்பான பேட்டர் என்பது தெளிவாகிறது; அவர் ‘பேக் ஃபுட்’ ஆட்டத்தை மட்டுமல்லாமல், தனது நீண்ட கைகளின் வீச்சையும் (Reach) சிறப்பாகப் பயன்படுத்தக்கூடியவர். முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்திலேயே ஸ்பின்னர் பிரபத் ஜெயசூரியாவை நிலைகுலையச் செய்தது நினைவிருக்கலாம்.

சுழற்பந்து வீச்சாளர்களின் நல்ல பந்துகளிலிருந்தும் ரன் எடுப்பதற்கான வாய்ப்புகளைப் படிக்கல் தொடர்ந்து உருவாக்கினால், அது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் படிக்கல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என நம்பலாம்.

எப்படிப்பார்த்தாலும் ராகுல் திராவிட், புஜாராவுக்குப் பிறகு ஒரு நல்ல 3-ம் நிலை பேட்டர் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளார். அதிலும் இடது கை வீரர் ஒருவர் அந்த டவுனில் இருப்பது எதிரணியினரை சிந்திக்க வைக்கும்.

SCROLL FOR NEXT