விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: டாப் பவுலர் அஜந்தா மெண்டிஸ் - மேலும் சில அற்புத பவுலர்கள்

ஆர்.முத்துக்குமார்

இந்தியா-இலங்கை இணைந்து நடத்தும் ஐசிசி டி20 உலகக்கோப்பை பிப்ரவரி 7ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தியா கடந்த டி20 உலகக் கோப்பை சாம்பியன் அணி, இந்த முறையும் இந்திய அணிக்கே பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. 3வது டைட்டிலை நோக்கி கடுமையாக இந்திய அணியினர் ஆடி வருகின்றனர்.

பொதுவாக டி20 என்றாலே இவர் இத்தனை சிக்சர்கள் அடித்தார், யார் பெரிய பேட்டர், அபிஷேக் சர்மாவா, டிராவிஸ் ஹெட்டா என்றெல்லாம் விவாதம் போகுமே தவிர மறக்கப்பட்ட கலையான பவுலிங், அதுவும் டி20- ஒன்றுமில்லாமல் செய்து விட்ட ஸ்பின் பந்து வீச்சு பற்றி பேச்சே இருக்காது. ஆனால் டி20 உலகக்கோப்பைகளில் அற்புதமாக வீசி போட்டியை வென்று கொடுத்த பவுலர்கள் பலர் உள்ளனர். அவர்களில் டாப் 5 பவுலர்கள் பற்றிப் பார்ப்போம்:

          

1. அஜந்தா மெண்டிஸ்- 2012 உலகக்கோப்பை- ஹம்பன்டோட்டா

இலங்கையின் புதிர் ஸ்பின்னர் என்று அழைக்கப்படும் அஜந்தா மெண்டிஸ் டி20 உலகக்கோப்பைகளில் ஒரு போட்டியில் கைப்பற்றிய அதிக விக்கெட்டுகளுக்கான சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார். இவர் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஹம்பன் டோட்டாவில் வெறும் 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகசாதனையை இன்னமும் தன் வசம் வைத்துள்ளார். இலங்கை முதலில் பேட் செய்து 182/4 என்று விளாச, ஜிம்பாப்வே அணி 100 ரன்களுக்குச் சுருண்டது. அஜந்த மெண்டிஸின் விரல்களின் நாட்டியத்திற்கு முன்னால் ஜிம்பாப்வே சரண்.

2. மூன்று ரன்களுக்கு 5 விக்கெட்: ரங்கனா ஹெராத் அசாத்தியம்:

2014ம் ஆண்டு உலகக்கோப்பை வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் சட்டோகிராமில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இலங்கையின் ரங்கனா ஹெராத் வெறும் 3 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இது இரண்டாவது சிறந்த டி20 உலகக்கோப்பைப் பந்து வீச்சாகும். இத்தனைக்கும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்ட இலங்கையை நியூஸிலந்து 119 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது. ஆனால் ஹெராட் மேஜிக் முன் நியூசிலாந்து ஒன்றும் செய்ய முடியாமல் 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தலைகுனிந்த்து. ஹெராத் எடுத்த பெரிய விக்கெட் பிரெண்டன் மெக்கல்லம். இவரை டக்கில் ஸ்டம்ப்டு முறையில் வெளியேற்றினார் ஹெராத். இதோடு அல்லாமல் இன்னொரு பெரிய வீரரான ராஸ் டெய்லரையும் எல்.பி. ஆக்கினார், இவரும் டக். ஜேம்ஸ் நீஷம் என்னும் யுவராஜ் சிங் டைப் வீரரையும் டக்கில் பவுல்டு செய்தார் ஹெராத். 3 டாப் வீரர்கள் டக் அவுட். காரணம் ஹெராத். பிறகு லூக் ரோங்கி, ட்ரெண்ட் போல்ட் ஆகியோரையும் வெளியேற்றி 60க்கு சுருட்டி சாதனை புரிந்தார் ஹெராத்.

3. பாகிஸ்தானின் உமர் குல் (2009)- 6 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்:

2009 டி20 உலகக்கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்ற போது ஓவல் மைதானத்தில் நியூஸிலாந்து அணியை பாகிஸ்தான் அணி எதிர்கொண்டது. இது ஒரு சூப்பர் 8 சுற்றுப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட் செய்ய தவறாகத் தீர்மானித்து உமர் குல்லிடம் சிக்கியது. 18.3 ஓவர்களில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது நியூஸிலாந்து அணி. பாகிஸ்தான் இலக்கை 13.1 ஓவர்களில் சேஸ் செய்தது. உமர் குல் 3 ஓவர்களில் 6 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறந்த பவுலிங்கிற்கான 3ம் இடத்தில் உள்ளார்.

4. ஃபசலுல்லா ஹக் ஃபரூக்கி - ஆப்கானிஸ்தான் - 2024:

2024 டி20 உலகக்கோப்பைத் தொடரில் கயானாவில் உகாண்டா அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஃபசலுல்லா பரூக்கி வெறும் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முதலில் பேட் செய்த ஆப்கான் 183 ரன்களைக் குவித்தது. பிறகு அதிபலவீனமான அணியான உகாண்டாவை 58 ரன்களுக்குச் சுருட்டியது.

5. சாம் கரன் - இங்கிலாந்து - 2022

2022 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடந்த போது பெர்த்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 சுற்றில் ஆப்கான் அணி முதலில் பேட் செய்து 19.4 ஓவர்களில் 112 ரன்களுக்குச் சுருண்டது. இங்கிலாந்து இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளில் வென்றது. சாம் கரன் 10 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது டி20 உலகக்கோப்பை சிறந்த பந்து வீச்சில் டாப் 5-ல் இடம்பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT