இங்கிலாந்து வீரர் டாம் பேன்டன்
கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ‘சி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த செய்த ஸ்காட்லாந்து 19.4 ஓவர்களில் 152 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் ரிச்சி பெரிங்டன் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 49 ரன்களும், மைக்கேல் ஜோன்ஸ் 20 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 33 ரன்களும் சேர்த்தனர்.
டாம் புரூஸ் 24, ஆலிவர் டேவிட்சன் 20 ரன்கள் எடுத்தனர். ஒரு கட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 13 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 115 ரன்கள் குவித்து வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் மேற்கொண்டு 37 ரன்களை சேர்ப்பதற்குள் கொத்தாக 6 விக்கெட்களை தாரை வார்த்து ஆட்டமிழந்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் டாவ்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 153 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டாம் பேன்டன் 41 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் விளாசினார்.
அவருக்கு உறுதுணையாக விளையாடிய சாம் கரண் 20 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 28 ரன்களும் வில் ஜேக்ஸ் 10 பந்துகளில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்களும் சேர்த்தனர். முன்னதாக பில் சால்ட் 2, ஜாஸ் பட்லர் 3 ரன்களில் நடையை கட்டினர். ஜேக்கப் பெத்தேல் 28 பந்துகளில், 32 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட்சன் பந்தில் ஆட்டமிழந்தார்.
5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தில் உள்ளது.
ஸ்காட்லாந்து அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அந்த அணி ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன் 2 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.