விளையாட்டு

T20 WC 2026: தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அரை இறுதியில் இன்று பலப்பரீட்சை

இறு​திப் போட்​டிக்கு முன்​னேறு​வது யார்?

செய்திப்பிரிவு

கொல்​கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென் ஆப்பிரிக்கா - நியூஸிலாந்து அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன.

எய்​டன் மார்க்​ரம் தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் இது​வரை தோல்​வியை சந்​திக்​காத அணி​யாக வலம் வரு​கிறது. லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​கள், சூப்​பர் 8 சுற்​றில் 3 ஆட்​டங்​கள் என தொடர்ச்​சி​யாக 7 ஆட்​டங்​களில் வெற்றி கண்​டிருந்​தது.

          

வலு​வான டாப் ஆர்​டர், நடு​வரிசை பேட்​டிங் மற்​றும் பந்​து​வீச்​சில் பல்​வேறு மாறு​பாடு​களை கொண்​டிருப்​பது அணி​யின் பலமாக உள்​ளது. பேட்​டிங்​கில் 175.16 ஸ்டிரைக் ரேட்​டுடன் 268 ரன்​கள் குவித்​துள்ள எய்​டன் மார்க்​ரம் பவர்​பிளே​வில் தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொள்​ளக்​கூடிய​வ​ராக உள்​ளார். நடப்பு தொடரில் 3 அரை சதங்​கள் விளாசி உள்ள அவரது அதி​கபட்ச ஸ்கோர் 86* ஆக உள்​ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​படக்​கூடும்.

இதே​போன்று 171.42 ஸ்டிரைக் ரேட்​டுடன் 228 ரன்​கள் சேர்த்​துள்ள ரியான் ரிக்​கெல்​டன், 172 ரன்​கள் எடுத்​துள்ள குயிண்​டன் டி காக் ஆகியோ​ரும் டாப் ஆர்​டரில் அதிர​யாக விளை​யாடக்​கூடிய​வர்​கள். நடு​வரிசை​யில் டேவிட் மில்​லர், டெவால்ட் பிரே​விஸ் ஆகியோர் தாக்​குதல் ஆட்​டம் தொடுக்​கும் திறன் கொண்​ட​வர்​கள். இவர்​களை தொடர்ந்து டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோ​ரும் பேட்​டிங்​கில் பலம் சேர்க்​கக்​கூடிய​வர்​கள்.

வேகப்​பந்து வீச்​சில் காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி, மார்கோ யான்​சன், கார்​பின் போஷ் ஆகியோர் வலு​வான செயல் திறனை வெளிப்​படுத்​தக்​கூடிய​வர்​கள். இதில் லுங்கி நிகிடி நடப்பு தொடரில் வேகம் குறைந்த பந்​துகள், வைடு யார்க்​கர்​கள், வேகம் குறைந்த லெக் கட்​டர்​கள் என பல்​வேறு மாறு​பாடு​களு​டன் எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு நெருக்​கடி கொடுத்து வரு​கிறார்.

இதனால் நியூஸிலாந்து அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு லுங்கி நிகிடி சவால்​தரக்​கூடும். சுழற்​பந்து வீச்​சில் கேசவ் மகா​ராஜ், ஜார்ஜ் லின்டே ஆகியோ​ருடன் பகுதி நேர சுழற்​பந்து வீச்​சாள​ரான எய்​டன் மார்க்​ர​மும் பலம் சேர்க்​கக்​கூடும்.

மிட்​செல் சாண்ட்​னர் தலை​மையி​லான நியூஸிலாந்து அணி லீக் சுற்​றில் 3 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​தது. தொடர்ந்து சூப்​பர் 8 சுற்​றில் பாகிஸ்​தானுடன் மோத இருந்த ஆட்​டம் மழை காரண​மாக ரத்​தானது. இலங்கை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் வெற்றி கண்ட நிலை​யில் இங்​கிலாந்து அணி​யிடம் தோல்வி அடைந்​தது. எனினும் நிகர ரன் ரேட் காரண​மாக பாகிஸ்​தான் அணியை தொடரில் இருந்து வெளி​யேற்றி அரை இறுதி வாய்ப்பை பெற்​றிருந்​தது நியூஸிலாந்து அணி.

டாப் ஆர்​டரில் டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் ஜோடி அதிரடி தொடக்​கம் அமைத்​துக் கொடுப்​பவர்​களாக உள்​ளனர். ஆனால் நடு​வரிசை​யில் கிளென் பிலிப்​ஸ், ரச்​சின் ரவீந்​தி​ரா, டேரில் மிட்​செல், மார்க் சாப்​மேன் ஆகியோரிடம் இருந்து இது​வரை பெரிய அளவி​லான தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவி​லான செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. ஒரு சில ஆட்​டங்​களில் மிட்​செல் சாண்ட்​னர் பின்​வரிசை​யில் அதிரடி​யாக விளை​யாடி அணி​யின் வெற்​றிக்கு உதவி​யிருந்​தார்.

இன்​றைய ஆட்​டம் முக்​கி​யத்​து​வம் வாய்ந்​தது என்​ப​தால் நடு​வரிசை பேட்​ஸ்​மேன்​கள் பொறுப்​புடன் செயல்​படு​வ​தில் கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும். பந்​து​வீச்​சில் தொடக்க ஓவர்​களில் மேட் ஹென்​றி, லாக்கி பெர்​குசன் அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். சுழலில் மிட்​செல் சாண்ட்​னர் நடப்பு தொடரில் ஓவருக்கு சராசரி​யாக 6.35 ரன்​களையே விட்​டுக்​கொடுத்​துள்​ளார். மேலும் 9 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யுள்ள ரச்​சின் ரவீந்​தி​ரா, கிளென் பிலிப்​ஸ், கோல் மெக்​கோன்சி ஆகியோ​ரும் பலம் சேர்க்​கக்​கூடும்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்​பிரிக்கா - நியூஸிலாந்து அணி​கள் 2-வது முறை​யாக மோத உள்​ளன. இந்த இரு அணி​களும் லீக் சுற்​றில் மோதி இருந்​தன. இதில் 176 ரன்​கள் இலக்கை துரத்​தி​யிருந்த தென் ஆப்​பிரிக்க அணி 17 பந்​துகளை மீதம் வைத்து 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது. இந்த தோல்விக்கு நியூஸிலாந்து அணி பதிலடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

போட்டி நடை​பெறும் ஈடன் கார்​டன் மைதானம் பேட்​டிங்குக்கு சாதக​மான​தாக இருக்​கும் என கணிக்​கப்​பட்​டுள்​ளது. முதலில் பேட் செய்​யும் அணி 200 ரன்​களுக்கு மேல் குவிக்க முயற்​சிக்​கக்​கூடும்.

கடந்த 1-ம் தேதி இங்கு நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​திய அணி 196 ரன்​கள் இலக்கை வெற்​றிகர​மாக துரத்​தி​யிருந்​தது. பனிப்​பொழிவு இருக்​கும் என்​ப​தால் டாஸை வெல்​லும் அணி பீல்​டிங்கை தேர்வு செய்​யவே அதிக வாய்ப்பு உள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி 8-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும்.

தென் ஆப்​பிரிக்கா ஆதிக்​கம்

டி20 உலகக் கோப்பை வரலாற்​றில் நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக தென்​ ஆப்​பிரிக்​கா அணி 5 முறை மோதி உள்​ளது. இதில்​ அனைத்​தி​லும்​ தென்​ ஆப்​பிரிக்​க அணியே வெற்றி கண்டிருந்தது.

SCROLL FOR NEXT