விளையாட்டு

T20 WC 2026: தொற்று போல் பரவிய தொடர் ‘ட்ராப் கேட்ச்கள்’ - இது அயர்லாந்து சோகம்!

ஆர்.முத்துக்குமார்

இலங்கை அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பைப் போட்டியில் நேற்று அயர்லாந்து அணி பீல்டிங் தவறுகளினால் கடும் ஏமாற்றமடைந்தது. கையில் வந்த கேட்ச்கள் 4 மற்றும் கேட்ச் ஆகச் சென்று ஒன்று முயற்சி செய்யாதது, தவறான கணிப்பு ஆகியவைகளால் 3 கேட்ச்கள் என்று 7 கேட்ச்களை அயர்லாந்து நேற்று ட்ராப் செய்து ஏமாற்றமளித்தது.

16-வது பந்திலேயே அயர்லாந்து அணியின் பீல்டிங் சிக்கல்கள் தொடங்கின. மிட்விக்கெட்டில் இருந்து இடதுபுறம் நகர்ந்த ராஸ் அடையர், கமில் மிஷாராவின் பேட்டில் இருந்து வந்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதுவே அந்த இன்னிங்ஸ் முழுவதும் தொற்று நோயாக மாறி அடுத்தடுத்து கேட்ச்கள் விடப்பட்டுக் கொண்டே இருந்தன.

          

இந்தத் தவறுகளில் மிக மோசமானவை, இன்னிங்ஸின் முக்கிய கட்டத்தில் நடந்தன. நடு ஓவர்களில் மெதுவாக முன்னேறிய இலங்கை, நான்கு ஓவர்கள் மீதமிருக்கும்போது 104/4 என்ற நிலைமைக்கு வந்திருந்தது. அப்போது ரன் வேகம் அதிகரிக்க அயர்லாந்தின் கேட்ச் தவறுகளும் அதிகரித்தன.

17-ஆவது ஓவரின் முதல் பந்தில், குசல் மெண்டிஸின் கேட்ச் நீண்ட நேரம் காற்றில் மிதந்தது. லாங்-ஆஃப் வீரர் சரியான இடத்தில் இருந்தும், கர்டிஸ் காம்பர் பாய்ந்து வந்து அந்த வாய்ப்பை முற்றிலும் தவறவிட்டார். இரண்டு பந்துகள் கழித்து, ஷார்ட் ஃபைன் லெக்கில் பாரி மெக்கார்த்தி பாய்ந்து முயன்ற கேட்ச் ட்ராப் ஆனது.

அடுத்த பந்தில், கமிந்து மெண்டிஸ் நேராக அடித்த ஷாட்டை ஜார்ஜ் டாக்ரெல் இரு கைகளால் தடுத்தும் பந்து துள்ளி எல்லைக் கோட்டைக் கடந்தது. அடுத்த ஓவரில், டீப் பேக் வார்ட் ஸ்கொயரில் ராஸ் அடையர் மீண்டும் ஒரு கேட்சை தவறவிட்டார். இப்படி கேட்ச்கள் தொற்று நோய் போல் வரிசையாக ஒவ்வொரு பீல்டராகத் தொற்றி அயர்லாந்தின் தோல்வியில் முடிந்தது.

பிற்பாடு ஹாரி டெக்டர் இது பற்றிக் கூறும்போது, “வீரர்கள் கவனம் சிதறியதால்தான் கேட்ச்கள் தவறினதாக நான் நினைக்கவில்லை. இவை தனித்தனியான சம்பவங்கள். ஆனால் ஒரு கேட்ச் தவறினால் அடுத்ததும் தவறுவது போல ஒரு தாக்கம் இருக்கும். இது நிச்சயமாக ஏமாற்றமளிக்கிறது. கிரிக்கெட்டில் இப்படியெல்லாம் நடக்கலாம், ஆனால் நாங்கள் இதை தொடர்ந்து அனுமதிக்க முடியாது.” என்றார்.

SCROLL FOR NEXT