புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிகளுக்கு எதிராக டி20 தொடர்களில் விளையாட உள்ளது.
இந்த தொடர்களுக்கான இந்திய அணில் மிதவேகப்பந்து வீச்சு ஆலரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் அவர், தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக விலகி உள்ளார். இதனால் அவருக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே, இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
நித்திஷ் குமார் ரெட்டி, சமீபத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியின் முடிவில் காயம் அடைந்திருந்தார். அவர், குணமடைவதற்கு 4 வாரங்கள் ஆகும். இதனால் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடர்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
23 வயதான சூர்யான்ஷ் ஷெட்கே நடுவரிசை பேட்ஸ்மேன் ஆவார். சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற ‘ஏ’ அணிகள் பங்கேற்ற முத்தரப்பு தொடரில் 5 ஆட்டங்களில் விளையாடி 147 ரன்கள் எடுத்திருந்தார். மிதவேகப்பந்து வீச்சாளரான அவர், 23 ஓவர்களையும் வீசியிருந்தார்.