விளையாட்டு

மே 31-ல் அகம​தா​பாத்​தில் ஐபிஎல் இறுதிப் போட்டி: பெங்களூருவில் இருந்து திடீர் மாற்றம்

தரம்​சாலா, நியூ சண்​டிகரில் பிளே ஆஃப் சுற்று ஆட்​டங்​கள்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மே 31-ம் தேதி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் ஐபிஎல் தொடரின் இறு​திப் போட்டி நடை​பெறும் என பிசிசிஐ அறி​வித்​துள்​ளது. பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தரம்​சாலா, நியூ சண்​டிகரில் நடை​பெறும் எனவும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஐபிஎல் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி அணி​யின் சொந்த மைதான​மான பெங்​களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்தில் இறு​திப்​போட்டி நடை​பெறு​வது​தான் மரபு. ஆனால் அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம் இறு​திப்​போட்​டியை நடத்​தத் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. இங்கு கடந்த ஆண்டை தவிர 2022 மற்​றும் 2023-ம் ஆண்​டு​களி​லும் ஐபிஎல் இறு​திப் போட்டி நடை​பெற்​றிருந்​தது.

பிசிசிஐ தனது செய்​திக்​குறிப்​பில், “முதலில் பெங்​களூரு​வில் இறுதிப்​போட்​டியை நடத்​தவே முடிவு செய்​யப்​பட்​டிருந்​தது. இருப்பினும், பிசிசிஐ-​யின் நிர்​ண​யிக்​கப்​பட்ட வழி​காட்​டு​தல்​கள் மற்​றும் நெறி​முறை​களுக்கு அப்​பாற்​பட்​டு, கர்​நாடக கிரிக்​கெட் சங்​கம் மற்​றும் அதி​காரி​களிட​மிருந்து சில கோரிக்​கைகள் வந்தன. இதன் காரண​மாக, இறு​திப்​போட்டி நடை​பெறும் இடம் மாற்​றப்​பட்​டுள்​ளது” என்று தெரி​வித்​துள்​ளது.

எனினும் கர்​நாடக கிரிக்​கெட் சங்​கம் குறிப்​பிட்ட கோரிக்கைகள் என்ன என்​பதை பிசிசிஐ விரி​வாக விளக்​க​வில்​லை. அதே வேளையில் இந்த ஆண்டு பிளே-ஆஃப் சுற்று ஆட்​டங்​கள் நடைபெறும் இடங்​களின் எண்​ணிக்கை அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. லீக் சுற்​றின் முடி​வில் புள்​ளிப்​பட்​டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்​கும் அணி​கள் மோதும் தகுதி சுற்​று-1 போட்​டி, மே 26-ம் தேதி தர்​ம​சாலா​வில் உள்ள இமாச்​சல் பிரதேச கிரிக்​கெட் சங்க மைதானத்​தில் நடை​பெறும். இதில் வெற்றி பெறும் அணி நேரடி​யாக இறு​திப்​போட்​டிக்​குத் தகுதி பெறும். தரம்​சாலா​வில் ஐபிஎல் பிளே ஆஃப் ஆட்​டம் நடை​பெற உள்​ளது இதுவே முதன்​முறை​யாகும்.

புள்​ளி​கள் பட்​டியலில் 3-வது மற்​றும் 4-வது இடங்​களை பிடிக்​கும் அணி​கள் எலிமினேட்​டர் ஆட்​டத்​தில் விளை​யாடும். இந்த போட்டி மே 27-ம் தேதி நியூ சண்​டிகர் முலான்​பூரில் உள்ள மகா​ராஜா யாதவீந்​திர சிங் சர்​வ​தேச கிரிக்​கெட் மைதானத்​தில் நடை​பெறும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதே மைதானத்​தில் மே 29-ம் தேதி தகுதி சுற்​று-2 போட்​டி​யும் நடை​பெறும். இந்த ஆட்​டத்​தில் தகுதி சுற்​று-1-ல் தோல்வி அடைந்த அணி​யும் எலிமினேட்​டர் ஆட்​டத்​தில் வெற்றி அடைந்த அணி​யும் பலப்​பரீட்சை நடத்​தும்.

இதில் வெற்றி பெறும் அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும். இறுதிப் போட்டி மே 31-ம் தேதி அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறுகிறது. அகம​தா​பாத் மைதானத்தில் 1.32 லட்​சம் பேர் அமர்ந்து போட்​டியை கண்டுகளிக்​கும் வசதி உள்​ளது. இதன் காரண​மாகவே ஐபிஎல் இறு​திப் போட்​டியை இங்கு நடத்​து​வதற்கு முன்​னுரிமை அளிக்கப்பட்​ட​தாக பிசிசிஐ வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.

மேலும் பெங்​களூரு மைதானத்​தில் இருக்கை எண்​ணிக்கை (35 ஆயிரம்) ஒப்​பீட்​டள​வில் குறை​வாகவே உள்​ளன.இந்த சீசனில் கர்​நாடக மாநிலத்​தின் எம்​.எல்​.ஏ-க்​கள், எம்​.எல்​.சி-க்​கள் மற்​றும் எம்.பி-க்​கள் ஒவ்​வொரு​வருக்​கும் தலா மூன்று இலவச ஐபிஎல் டிக்​கெட்​டு​கள் வழங்​கப்பட வேண்​டும் என்று கர்​நாடக அரசு தெரிவித்து இருந்​தது. இதுவே இறு​திப் போட்​டியை பெங்களூருவில் இருந்து அகம​தா​பாத்​துக்கு மாற்​று​வதற்​கு முக்கிய காரணம்​ என்று கூறப்படுகிறது.

கர்நாடக கிரிக்கெட் சங்கம் அதிருப்தி

கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் செய்தித் தொடர்பாளரான வினய் மிருத்யுஞ்சயா கூறும்போது, “ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகள் மற்ற மையங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் பிரசாத் பிசிசிஐயுடன் தொடர்பில் இருந்தார்.

புகழ்பெற்ற சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் பிளே-ஆஃப் போட்டிகளை நடத்துவதற்கு தயாராக இருந்தோம். இருந்தபோதிலும், இந்தப் போட்டிகளை மற்ற மைதானங்களுக்கு ஒதுக்க பிசிசிஐ எடுத்துள்ள முடிவை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தப் போட்டிகள் மற்ற இடங்களுக்கு மாற்றப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும் இது தொடர்பாக பிசிசிஐ-க்கு இருக்கும் தனிப்பட்ட உரிமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரத்தை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்" என்றார்.

SCROLL FOR NEXT