தம்புல்லா: இந்தியா-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இலங்கை-ஏ அணி 7 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தியா-ஏ, இலங்கை-ஏ, ஆப்கானிஸ்தான்-ஏ உள்ளிட்ட மூன்று அணிகள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடுகின்றன. இந்தத் தொடரின் ஆட்டங்கள் அனைத்தும் இலங்கையில் உள்ள தம்புல்லாவில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியின் கேப்டனாக திலக் வர்மா செயல்படுகிறார்.
இந்த தொடரின் நான்காவது ஆட்டம் இன்று (ஜூன் 15) நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த இந்தியா-ஏ அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா-ஏ சார்பில் சூர்யான்ஷ் 72, விப்ராஜ் 51, ருதுராஜ் 37, திலக் வர்மா 23, வைபவ் சூர்யவன்ஷி 21 ரன்கள் எடுத்தனர். 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா-ஏ தடுமாறியது. அப்போது 8-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அது இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
இலங்கை-ஏ சார்பில் பந்து வீசிய முகமது ஷிராஸ் மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
50 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை-ஏ விரட்டியது. அந்த அணிக்காக சதீரா சமரவிக்ரமா 93, நிரோஷன் 37, வனுஜா 25, அவிஷ்கா 22 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் மட்டுமே இலங்கை அணியால் எடுக்க முடிந்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதன் பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை-ஏ, ஆறு பந்துகளில் 16 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த இந்தியா-ஏ அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி மற்றும் சூர்யான்ஷ் விளையாடினர். இந்த ஓவரில் ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே இந்தியா விளாசியது. இரண்டு பந்துகளில் ரன் எடுக்கவில்லை.
சூப்பர் ஓவரில் இந்தியா-ஏ 9 ரன்கள் எடுத்தது. இதனால் இலங்கை-ஏ சூப்பர் ஓவரில் 7 ரன்களில் வெற்றி பெற்றது. வரும் புதன்கிழமை அன்று இந்த தொடரில் ஆப்கானிஸ்தான்-ஏ அணி உடன் இந்தியா விளையாயிடுகிறது. அதில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் சூழல் உள்ளது.