கனடாவின் ஆன்டாரியோ நகரில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், எகிப்தின் ஹபிபா ரிஸ்க்குடன் மோதினார். இந்த மோதலில் அனஹத் சிங் 11-7, 11-5, 6-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பாட்மிண்டனில் தமிழகத்துக்கு 2 தங்கம்
அகில இந்திய சீனியர் ரேங்கிங் பாட்மிண்டன் தொடர் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழ்நாட்டின் ஷ்ரேயா பாலாஜி, விமல்ராஜ் அண்ணாதுரை ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.
மகளிர் இரட்டையரில் நயனா ஓயாஸிஸ் (கேரளம்) - வி.எஸ்.வர்ஷினி (தமிழ்நாடு) தங்கம் வென்றனர்.ஆடவர் இரட்டையர் பிரிவில் மகாராஷ்டிராவின் விப்லவ் குவாலே-விராஜ் குவாலே ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் உத்தராகண்டின் துருவ் நேகியும், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஹரியாணாவின் ஜியா ரவாத்தும் தங்கம் வென்றனர்.
வெள்ளிப் பதக்கம் வென்றார் சன்யம்
சீனாவின் ஹங்சோ நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் சன்யம் 243.4 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் ஷியாங் ஷாங்கி 243.6 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றார். ஈரானின் ஹனியே ரோஸ்டமியான் 221.0 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
கால் இறுதிக்கு முன்னேறினார் ராதிகா
பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 2-வது சுற்றில் இந்தியாவின் ரவிகுமார் 12-10, 11-5, 3-11, 11-7 என்ற செட் கணக்கில்ஜப்பானின் ஷோட யசுன்யையும், ஓம் செம்வால் 11-9, 4-11, 4-11, 12-10, 11-8 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் ஆரோன் லியாங்கையும் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.மகளிர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ராதிகா சீலன் 8-11, 11-9, 11-2, 7-11, 12-10 என்ற செட் கணக்கில் சிங்கப்பூரின் வாய் லின் ஆ யோங்கை வீழ்த்தி கால் இறுதி சுற்றில் கால் பதித்தார்.
கால் இறுதியில் நேரடியாக இந்தியா, பாக். அணிகள்
ஆசிய விளையாட்டு போட்டி வரும் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை ஜப்பானின் உள்ள ஐச்சி நகோயாவில் நடைபெறுகிறது. இதில் கிரிக்கெட் விளையாட்டுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கால் இறுதி சுற்றில் நேரடியாக நுழைந்துள்ளன. ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணியுடன் பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம் ஆகிய அணிகளும் கால் இறுதி சுற்றுக்கு நேரடியாக நுழைந்துள்ளன. மீதம் உள்ள 4 அணிகள் லீக் சுற்றில் இருந்து முன்னேறும்.
மகளிர் பிரிவில் இந்திய அணி கால் இறுதி சுற்றில் ஜப்பானுடன் மோதுகிறது. அரை இறுதி சுற்றில் இந்திய மகளிர் அணி வங்கதேசம் அல்லது சீனாவுடன் மோதக்கூடும். மகளிர் பிரிவு ஆட்டங்கள் செப்டம்பர் 17 முதல் 22 வரை நடைபெறுகிறது.