கிளாஸ்கோ: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நீச்சலில் ஆடவருக்கான 4x100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தென் ஆப்பிரிக்க வீரர் சாட் லெ க்ளோஸ் பந்தய தூரத்தை 3:13.99 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் சாட் லெ க்ளோஸ் வெல்லும் 19-வது பதக்கம் இதுவாகும். இதன் மூலம் அதிக பதக்கங்கள் வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார் சாட் லெ க்ளோஸ். இந்த வகை சாதனையில் ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் 14 தங்கம், ஒரு வெற்றி, 5 வெண்கலம் என 20 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
துப்பாக்கி சுடுதல் வீரர்களான ஆஸ்திரேலியாவின் பில் ஆடம்ஸ், இங்கிலாந்தின் மிக் கவுல்ட் ஆகியோர் தலா 18 பதக்கங்களுடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். 34 வயதான சாட் லெ க்ளோஸ் கடந்த 2010-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டில் அறிமுகமானார். அப்போது தனது 18 வயதில் அந்தத் தொடரில் 5 பதக்கங்கள் வென்றிருந்தார்.
தற்போது 5-வது முறையாக காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்றுள்ள சாட் லெ க்ளோஸ் இதுவரை 7 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.