விண்ட்ஹோக்: நமீபியாவில் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று விண்ட்ஹோக் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 51 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசினார். டெவால்ட் பிரேவிஸ் 41, ஜோர்டான் ஹெர்மான் 28 ரன்கள் சேர்த்தனர்.
ஜிம்பாப்வே அணி தரப்பில் வெஸ்ஸி மாதவரே 3 விக்கெட்களையும், பிராடு இவான்ஸ் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 186 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 17.4 ஓவர்களில் 142 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் சிகந்தர் ராஸா 45, நியூமன் நியாம்ஹுரி 27, இன்னசென்ட் கையா 18 ரன்கள் சேர்த்தனர். 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.