அகமதாபாத்: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா இப்போது அரையிறுதி வாய்ப்பை நெருங்கியுள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள தென் ஆப்பிரிக்கா - மேற்கு இந்தியத் தீவுகள் இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதின. இரு அணிகளுக்கு இது 2-வது ஆட்டமாக அமைந்திருந்தது.
முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி அதிரடியாக விளையாடியது. கேசவ் மகாராஜ் வீசிய முதல் ஓவரில் கேப்டன் ஷாய் ஹோப் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் குவிக்கப்பட்டது. மார்கோ யான்சன் வீசிய அடுத்த ஓவரில் பிரண்டன் சிங் 3 பவுண்டரிகளை அடித்தார். இதனால் 2 ஓவர்களில் 29 ரன்களை குவித்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி மிரளச் செய்தது.
ஆனால் இதன் பின்னர் காகிசோ ரபாடா, லுங்கி நிகிடி, கார்பின் போஷ் ஆகியோர் தங்கள் சீரரான வேகத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை அணியை கட்டுப்படுத்தினர். ஷாய் ஹோப் 16 ரன்களில் ரபாடா பந்தில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஷிம்ரன் ஹெட்மயர் 2 ரன்களில் ரபாடா பந்தில் நடையை கட்டினார். பிரண்டன் கிங் 11 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 21 ரன்களில் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.
ராஸ்டன் சேஸ் 2, ஷெர்பேன் ரூதர்போர்டு 12, ரோவ்மன் பவல் 9, மேத்யூ போர்டு 11 ரன்களில் நடையை கட்டினர். 10.2 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 83 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தவித்தது. ஆனால் அதன் பின்னர் ஜேசன் ஹோல்டர், ரோமாரியோ ஷெப்பர்டு ஜோடி தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது.
ரோமாரியோ ஷெப்பர்டு 37 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் ஜேசன் ஹோல்டர் 31 பந்துகளில், 3 சிகஸ்ர்கள், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் விளாச மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது.
8-வது விக்கெட்டுக்கு ஜேசன் ஹோல்டர், ரோமாரியோ ஷெப்பர்டு ஜோடி 57 பந்துகளில், 89 ரன்கள் விளாசியது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்களை வீழ்த்தினார். காகிசோ ரபாடா, கார்பின் போஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.
இதையடுத்து 177 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி எய்டன் மார்க்ரம், குயிண்டன் டி காக் ஆகியோரது அதிரடியால் 16.1 ஓவர்களில், ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. தனது 14-வது அரை சதத்தை கடந்த கேப்டன் எய்டன் மார்க்ரம் 46 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்களும் ரியான் ரிக்கெல்டன் 28 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 82 ரன்களை குவித்தது.
முன்னதாக குயிண்டன் டி காக் 24 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் விளாசிய நிலையில் ராஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு எய்டன் மார்க்ரம், குயிண்டன் டி காக் ஜோடி 48 பந்துகளில் 95 ரன்களை வேட்டையாடியது.
9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு சூப்பர் 8 சுற்றில் இது 2-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியாவை வீழ்த்தியிருந்தது. இந்த இரு வெற்றிகளின் வாயிலாக தென் ஆப்பிரிக்க அணி 4 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதை ஏறக்குறைய உறுதி செய்தது.