வருண் சக்கரவர்த்தி
கொல்கத்தா: வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் கணித்து விட்டனர் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, கடந்த 2024 முதல் டி20 கிரிக்கெட்டில் 61 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். தற்போது சர்வதேச டி20 கிரிக்கெட் பவுலர்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்று முதல் அவரது பந்து வீச்சை எதிரணி வீரர்கள் துவம்சம் செய்து வருகின்றனர்.
மோசமான ஃபார்ம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசனிலும் ரன்களை வாரி கொடுத்து வருகிறார். நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2 ஆட்டங்களில் 6 ஓவர்கள் வீசி 79 ரன்கள் எடுத்துள்ளார். இதில் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. இதையடுத்து கொல்கத்தா அணி விளையாடிய மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஆடும் லெவனில் அவர் இடம்பெறவில்லை.
இந்த சூழலில் வருண் சக்கரவர்த்தி குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார். “வருண் இப்போது தனது ஃபார்மை இழந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சை கணித்து விட்டனர். அவர் எந்த டெலிவரி வீசப் போகிறார் என்பதை பேட்ஸ்மேன்கள் அறிந்து வைத்துள்ளனர். அதுதான் கவலைக்குரிய விஷயமாக உள்ளது” என்று கங்குலி கூறியுள்ளார்.