முகமது ஷமி
64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 229 விக்கெட்டுகளை எடுத்த நிலையில் கிட்டத்தட்ட பாதியிலேயே டெஸ்ட் கரியர் முடிந்து விட்டதோ என்று தோன்றும் அளவுக்கு ஷமியின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியையும் வருத்தங்களையும் வேதனைகளையும் கொடுத்துள்ளது.
இன்னும் அவர் 15-20 டெஸ்ட் போட்டிகள் ஆடியிருந்தால் 300 விக்கெட்டுகள் என்ற உயர்மட்ட இந்திய வேகப்பந்து வீச்சு கிளப்பில் இணைந்திருப்பார். ஆனால், அஜித் அகார்க்கர் தலைமை அணித்தேர்வுக்குழுவும் கவுதம் கம்பீரின் பிடிவாதமும் சேர்ந்து அவரை இன்று ஓய்வு பெறச் செய்துள்ளது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்தது போல் ‘இது ஒரு வலிந்து புகுத்தப்பட்ட ஓய்வு அறிவிப்புதான்’.
நவம்பர் 6, 2013-ல் மே.இ.தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷமி அந்த டெஸ்ட்டிலேயே 9 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியதோடு, ரிவர்ஸ் ஸ்விங் கலையை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார். அவர் சரியாக 13 ஆண்டுகள் நிறைவு செய்து நவம்பர் 6, 2026-ல் தன் ஓய்வை அறிவித்துள்ளார்.
நடப்பு ரஞ்சி சீசனிலேயே அவர் 14 விக்கெட்டுகளை 3 போட்டிகளில் எடுத்துள்ளார். முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவருமே ஒரு நட்சத்திர பவுலர், மேட்ச் வின்னிங் பவுலரை இப்படியா சடங்கார்த்தமாக இல்லாமல் ஒழித்து வெறுப்படையச் செய்து ஓய்வு பெற வைப்பது என்று பிசிசிஐ மீது கடும் கோபாவேசம் அடைந்துள்ளனர்.
ரசிகர்கள் ‘ஷேம் ஆன் யூ’ என்று பிசிசிஐ மீது கடும் விமர்சனங்களைத் தொடுத்து வருகின்றனர்.
ஷமியின் அந்த நேர் ரன் அப், பந்தின் தையல் நேராக வைத்து கடினமான லெந்த்தில் பந்தை பிட்ச் செய்து எழுப்புவது ஸ்விங் செய்வது போன்றவற்றையோ அவரது ‘டெட்லி’ இன்ஸ்விங்கர்களையோ இனி பார்க்க முடியாது என்பது உண்மையில் பவுலிங்கை ரசிக்கும் ரசிகர்களுக்கு மன வேதனை அளிப்பதே.
பிசிசிஐ என்னதான் காயம், வயது, புதிய வீரர்கள், இளம் ரத்தங்கள் என்று ஆயிரம் காரணம் சொன்னாலும் கிரிக்கெட் அல்லாத காரணத்தினால்தான் அவர் கரியர் அரைகுறையாக முடிந்து விட்டது என்ற எண்ண ஓட்டத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.
மறக்க முடியாத ஸ்பெல்கள்
2018-ல் பெர்த்தின் அதிவேக ஆப்டஸ் ஸ்டேடிய கிரீன் டாப் பிட்சில் முதல் இன்னிங்ஸில் விக்கெட் இல்லாமல் முடிய, 2வது இன்னிங்ஸில் அட்டகாசமான அச்சுறுத்தல் பந்து வீச்சை வீசி 56 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஷமி. ஆஸியின் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் ஆட்டம் காண 243 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா முதல் முதலில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்த ஸ்பெல் பெரிய கிரியா ஊக்கி என்றால் மிகையானதல்ல.
2013-ல் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 9 விக்கெட்டுகளை 113 ரன்களுக்குக் கைப்பற்றிய அந்த ஸ்பெல்லின் மூலம் உலகிற்கு தன் வருகையை அறிவித்தவர் ஷமி. முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற மே.இ.தீவுகள் 234 ரன்களுக்குச் சுருண்டது. ரோஹித் சர்மா, அஸ்வின் சதங்களுடன் இந்தியா 453 ரன்களைக் குவித்தது. 2-வது இன்னிங்ஸில் தன் அபாரமான ரிவர்ஸ் ஸ்விங் திறமையைப் பயன்படுத்தி ஷமி 5 விக்கெட்டுக்ளைச் சாய்க்க மே.இ.தீவுகள் 168 ரன்களுக்கு மடிந்தது.
இந்தப் போட்டியிலேயே பாரபட்சம் நடந்தது ரோஹித் சர்மா தன் அறிமுகப் போட்டியில் 177 ரன்கள் எடுத்தார் என்று அவருக்கே ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது, ஷமி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியவருக்கு குறைந்தது ஆட்ட நாயகன் விருது பகிர்ந்தளிக்கப்படக்கூட இல்லை என்பது வேதனை.
>> 2018 - தென் ஆப்பிரிக்காவை சுருட்டிய 5 விக்கெட்டுக்கு 28 ரன்கள்: ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்தியா 187 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், ஷமி ஒரு விக்கெட்டைக் கைப்பற்ற, தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களுக்குச் சுருண்டது. 2-வது இன்னிங்ஸில் அஜிங்க்ய ரஹானே மற்றும் விராட் கோலி ஆகியோரின் போராட்டமான ஆட்டத்தால், இந்தியா 240 ரன்கள் முன்னிலை பெற்றது; இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற 240 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஷமி இதில் 28 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடக்க ஆட்டக்காரர் மார்க்ரமின் விக்கெட்டை வீழ்த்தி தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார். பின்னர், தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி வரிசை வீரர்களை அடுத்தடுத்து வெளியேற்றி, அந்த அணியை 177 ரன்களுக்குச் சுருட்டியதன் மூலம், இந்தியா ஒரு மறக்கமுடியாத வெற்றியைப் பதிவு செய்தது. இத்தனைக்கும் ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 100 ரன்களைக் கடந்தும் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து டீன் எல்கரின் போராட்ட இன்னிங்ஸினால் வெற்றியை நோக்கியே சென்று கொண்டிருந்தது, அப்போதுதான் ஷமியின் அந்த ஸ்பெல் மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுத்தந்தது.
>> தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மீண்டும் அபாரம் (2021): செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 327 ரன்களுக்குப் பதிலளித்த தென் ஆப்பிரிக்க அணி, முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் (44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்) வெறும் 197 ரன்களுக்குச் சுருண்டது. இது இந்தியா 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது; அந்தப் போட்டியில் இந்தியா 305 ரன்களை வெற்றிகரமாகத் தற்காத்துக் கொண்டது. இரண்டாவது இன்னிங்ஸிலும் தென் ஆப்பிரிக்க அணி 191 ரன்களுக்குச் சுருண்ட நிலையில், ஷமி மேலும் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
>> தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5/35: இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் 502/7 (டிக்ளேர்) மயங்க் அகர்வால் 215 ரன்களையும், ரோஹித் சர்மா 176 ரன்களையும் குவித்தனர். அதற்குப் பதிலளித்த தென் ஆப்பிரிக்க அணி 431 ரன்களை எடுத்தது. டீன் எல்கர் 160 ரன்களையும் குவிண்டன் டி காக் 111 ரன்களையும் விளாசினர். ஷமி விக்கெட் இல்லை அஸ்வின் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 2வது இன்னிங்ஸில் மீண்டும் ரோஹித் சர்மா 127 என்று சதமெடுக்க 4 விக்கெட் இழப்புக்கு 323 ரன்கள் என்று விராட் கோலி டிக்ளேர் செய்தார். பின்னர், 395 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியை, ஷமி 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நிலைகுலையச் செய்தார்; அந்த அணி வெறும் 191 ரன்களுக்கே சுருண்டது.
ஷமி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தொடர்வார் என்றாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இவரது பிரேக் த்ரூ ஸ்பெல்களால் எத்தனை போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது குறிப்பாக 2-வது இன்னிங்ஸ் பவுலிங் தாதா என்றே ஷமியைக் குறிப்பிடலாம். இன்னும் விளையாட உடல்வலு, மன வலிமை, திறமை இத்தனை இருந்தும் அவர் வேதனையுடன் ஓய்வு அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சோகமான அத்தியாயமே.