கிளாஸ்கோ: கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் தொடக்க நாளான நேற்று லான் பவுல் விளையாட்டில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது.
மகளிருக்கான அணிகள் பிரிவில் இந்தியாவின் ரூபா ராணிதிர்கே, பிங்கி ஜோடி மால்டாவின் ரெபெக்கா லூயிஸ் ரிக்சன், கோனி லீ ரிக்சன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. முதல் செட்டை இந்தியா 7–1 எனவும், 2-வது செட்டை மால்டா 4–3 எனவும் கைப்பற்றின. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க நடத்தப்பட்ட டை பிரேக்கரில் இந்திய ஜோடி 1-0 என வெற்றி பெற்றது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் புதுல் சோனோவால், உலக சாம்பியனான கனடாவின் ரியான் பெஸ்டரை எதிர்த்து விளையாடினார். முதல் செட்டை புதுல் சோனோவால் 5–4 என கைப்பற்றினார்.
ஆனால் 2-வது செட்டை ரியான் பெஸ்டர் 7–3 என தன்வசப்படுத்தினார். இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்கரில் புதுல் சோனோவால் 1–0 என வெற்றி பெற்றார். இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஃபாக்லாந்து தீவுகளின் வீரர் செசில் அலெக்ஸாண்டருடன் மோதுகிறார் புதுல் சோனோவால்.