கொழும்பு: கொழும்பில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இலங்கை அணி போராடி டிரா செய்தது. எனினும் முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்திய அணி தொடரை 1-0 என வென்று கோப்பையை கைப்பற்றியது.
கொழும்பு நகரில் உள்ள சிங்களீஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து விளையாடிய இலங்கை அணி 89.4 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது. பாலோ-ஆன் பெற்று 213 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 72.4 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்தது.
லகிரு உதரா 3, கமில் மிஷாரா 32, பசிந்து சூரியபண்டாரா 92, கமிந்து மெண்டிஸ் 55, கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 23, நிரோஷன் டிக்வெல்லா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். சோனல் தினுஷா 7 ரன்களும், கேஷரா நுவந்தா 3 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். 16 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளையாடியது.
சோனல் தினுஷாவும், கேஷரா நுவந்தாவும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தி இந்திய பந்துவீச்சாளர்களை கடும் சோதனைக்கு உட்படுத்தினர். இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எந்த ஒரு கட்டத்திலும் வாய்ப்பை வழங்காமல் விளையாடியது.
இந்த செஷனில் மட்டும் இலங்கை அணி 30.2 ஓவர்களில் 100 ரன்கள் சேர்த்தது. சோனல் தினுஷா 49, கேஷரா நுவந்தா 40 ரன்களுடன் உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடினர். மானவ் சுதார் வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் கேஷரா நுவந்தா, சிலிப் திசையில் நின்ற துருவ் ஜூரெலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
150 பந்துகளை சந்தித்த கேஷரா நுவந்தா 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியிடம் இருந்து வெற்றியை பறித்த இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 41 ஓவர்களை களத்தில் செலவிட்டு 112 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பிரபாத் ஜெயசூரியாவும், சோனல் தினுஷாவுடன் இணைந்து போராடினார். இந்த ஜோடி 74 பந்துகளை எதிர்கொண்டு 25 ரன்கள் சேர்த்தது. பிரபாத் ஜெயசூரியா 28 பந்துகளில், 2 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். 9-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய லகிரு குமாராவும் நேர்த்தியாக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தார். அவருடன் இணைந்து தினுஷா 47 ரன்கள் சேர்த்தார். ஆனால் இந்த ஜோடி 170 பந்துகளை எதிர்கொண்டு விளையாடி, இந்திய வீரர்களின் வெற்றி நம்பிக்கையை அடியோடு தகர்த்தனர்.
சோனல் தினுஷா 196 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் தனது 3-வது சதத்தை விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய லகிரு குமாரா 90 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் வெளியேறினார்.
இதையடுத்து அசிதா பெர்னாண்டோ களமிறங்கினார். அவரையும் ஆட்டமிழக்க செய்ய இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இலங்கை அணி 154 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 429 ரன்கள் குவித்த நிலையில் 2-வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அந்த நேரத்தில் இலங்கை அணி 216 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
இதையடுத்து நேரம் குறைவாகவே இருந்ததால் ஆட்டத்தை டிராவில் முடித்துக்கொள்ள இரு அணிகளின் கேப்டன்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சோனல் தினுஷா 264 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர், 420 நிமிடங்களை (7 மணி நேரம்) களத்தில் செலவிட்டு இருந்தார். அசிதா பெர்னாண்டோ 24 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் இருந்தார்.
இந்திய அணி தரப்பில் மானவ் சுதார், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முதல் டெஸ்ட் போட்டியில் 165 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால் 2 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றி கோப்பையை வென்றது.
ஆட்ட நாயகனாக இலங்கை அணியின் சோனல் தினுஷா தேர்வானார். அவர், இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 103 ரன்களும், 2-வது இன்னிங்ஸில் 133* ரன்களும் விளாசினார். தொடர் நாயகனாக இந்தியாவின் தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டார். அவர், இந்த தொடரில் 2 சதங்களுடன் 328 ரன்கள் குவித்திருந்தார்.
வெற்றி பெற முடியாமல் போனது ஏன்?
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய போதிலும், கொழும்பு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறத் தேவையான கடைசி 4 விக்கெட்டுகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் வீழ்த்த முடியாமல் போனது இந்திய அணிக்கு நிச்சயம் உறுத்தலாகவே இருக்கும். ஐந்தாம் நாள் ஆடுகளத்தில் பந்துவீச்சில் போதிய கூர்மை இல்லாததற்கு, தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களில் பந்துவீசியதைக் காரணமாகக் காட்டி இந்திய அணி தப்பிக்க முயற்சிக்கலாம். ஆனால், வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் பின்வரிசை பேட்டர்களை வீழ்த்த முடியாத பலவீனம் இன்னும் இந்திய அணியில் நீடிக்கிறது என்பதே நிதர்சனம்.
‘டெஸ்ட் போட்டி வென்றது’
இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கூறும்போது, “நாங்கள் சுமார் 150 ஓவர்கள் பந்துவீசினோம், எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். நாங்கள் வேறுவிதமாக எதையாவது செய்திருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. வானிலையைக் கருத்தில் கொண்டே இலங்கை அணிக்கு பாலோ-ஆன் கொடுத்தோம். சில விஷயங்கள் நமது கையைமீறிப் போய்விடுகின்றன. ஆனால் இது அற்புதமான போட்டியாக அமைந்தது. டெஸ்ட் கிரிக்கெட்தான் வென்றது என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
2 டெஸ்ட்.. 18 மணி நேரம்
இலங்கை அணியின் பேட்ஸ்மேனான 25 வயதாகும் சோனல் தினுஷா இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக 722 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இந்த வகையில் அவர், 1,139 நிமிடங்கள் (18 மணி நேரம் 59 நிமிடங்கள்) களத்தில் பேட் செய்துள்ளார்.
பாலோ-ஆன் சதங்களில் 3-வது வீரர்
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த இலங்கையின் சோனல் தினுஷா, பாலோ-ஆன் பெற்ற பின்னர் 2-வது இன்னிங்ஸிலும் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் பாலோ-ஆன் பெற்ற டெஸ்ட் போட்டியில் இரு முறை சதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னர் இதேபோன்று இந்தியாவின் விஜய் ஹசாரே, ஜிம்பாப்வேயின் ஆண்டி பிளவர் ஆகியோரும் சதங்கள் அடித்து இருந்தனர்.
முயற்சிகள் முறியடிப்பு
சோனல் தினுஷாவுக்கு ஸ்ட்ரைக் கிடைக்காமல் தடுத்து, பின்வரிசை பேட்டர்களை சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆட வைக்க, ஷார்ட்-பிட்ச் பந்துகள் மற்றும் லெக்-சைடு பந்துவீச்சு உத்திகளைக் கையாண்டு இந்திய வீரர்கள் ஆங்காங்கே கடுமையாகப் போராடிப் பார்த்தனர். ஆனால் தினுஷாவும் பின்வரிசை வீரர்களும் இந்தியாவின் பந்துவீச்சுத் தாக்குதலை உறுதியாக எதிர்கொண்டு முறியடித்தனர்.
வெளிநாட்டில் முதல் கோப்பை
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றியது. கேப்டனாக ஷுப்மன் கில் வெளிநாட்டில் வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும்.
3 ஆண்டுகளுக்கு பிறகு
வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா வென்றிருந்தது.