விளையாட்டு

கண்கெட்ட பிறகு... பவுலிங்கில் ஓகேதான்; பாஸ்பால் தவிர்ப்பினும் தோல்வி நோக்கி இங்கிலாந்து!

ஆர்.முத்துக்குமார்

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று இங்கிலாந்து அணி தன் பந்து வீச்சில் முன்னேற்றம் கண்டு கடைசி 6 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை 38 ரன்களுக்குக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவை 2வது இன்னிங்சில் 349 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது.

இதனையடுத்து 435 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மீண்டும் பேட்டிங்கில் நன்றாக ஆடுவது போல் பாவ்லா காட்டி மீண்டும் சொதப்பி 4-ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது. 4ம் நாள் ஆட்ட முடிவில் ஜேமி ஸ்மித் 30 பந்துகளில் 2 ரன்களுடனும் வில் ஜாக்ஸ் 11 ரன்களுடனும் களத்தில் நிற்கின்றனர்.

வெற்றி பெற 228 ரன்கள் தேவை என்ற நிலையில் அநேகமாக ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியாவுக்குத்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியே. இதில் ஏதாவது மாற்றம் நிகழவேண்டுமெனில் இங்கிலாந்தின் மீதமிருக்கும் பேட்டர்கள் அற்புதங்களை நிகழ்த்தினால்தான் உண்டு.

இங்கிலாந்து தரப்பில் ஜாக் கிராலி (85), ஜோ ரூட் (39), ஹாரி புரூக் (30) நன்றாக செட்டில் ஆகிவிட்டது போல் ஆடினர், ஆனால் கமின்ஸ், லயன் ஆகியோரின் அட்டகாசமான பந்து வீச்சினாலும் கமின்ஸின் சாதுரியமான கேப்டன்சியினாலும் தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் செட்டில் ஆக முடியாமல் கடும் பிரஷருக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டே இருந்தனர். செஞ்சூரியன் அலெக்ஸ் கேரி விக்கெட் கீப்பிங் என்றால் என்ன என்று ஜேமி ஸ்மித்திற்கு பாடம் எடுத்தது போல் கீப்பிங் செய்தார், அட்டகாசமான கீப்பிங்!

அதுவும் போலண்ட் பந்துக்கு ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப் செய்த அற்புதங்கள் காணக்கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது.

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸைத் தொடங்கியதும் பிளாஷ் பவுண்டரியுடன் தொடங்கினார் பென் டக்கெட், ஆனால் அதே ஓவரில் எப்படியும் தொடுவார் கெடுவார் என்று நினைத்தபடியே கமின்ஸ் ஒரு பந்தை பேக் ஆஃப் த லெந்தில் வீசி சற்றே வெளியே இழுக்க அதை ஒன்று ஆடாமல் விட்டிருக்க வேண்டும், அல்லது ஒரு சுற்று சுற்றியிருக்க வேண்டும் இரண்டும் செய்யாமல் மட்டையைத் தொங்க விட்டு எட்ஜ் ஆகி லபுஷேன் கையில் கேட்ச் ஆகி பென் டக்கெட் தன் இங்கிலாந்து டெஸ்ட் இடத்தை இழக்கத் தகுதியானவர் என்று அறிவித்தாற்போல் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

அதே போல் தன் இங்கிலாந்து டெஸ்ட் இடத்தை இழக்கும் இன்னொரு வீரர் ஆலி போப், இவரை நிற்க வைத்து ஸ்டார்க்கும், கமின்ஸும் ஆட்டிப்படைத்தனர். 17 ரன்களை எடுத்தார், ஆனால் அவர் ஆட்டத்தில் அவருக்கே திருப்தி இல்லை. கடும் பிரஷரில் ஆடினார். கடைசியில் கமின்ஸ் பந்தில் எட்ஜ் ஆக 2வது ஸ்லிப்பில் பந்து தரைத்தட்டவிருக்கும் தருணத்தில் லபுஷேனின் இடது கை செய்த ஜாலம்... கேட்ச் ஆனது. ஆலி போப் இங்கிலாந்து டெஸ்ட் கரியர் அவ்வளவுதான் என்று தெரிகிறது.

அதன் பிறகு கிராலியும் ரூட்டும் இணைந்து 78 ரன்கள் கூட்டணி அமைத்தனர், நல்ல தன்னம்பிக்கையுடன் ஆடினர், நேதன் லயனை லைன் மற்றும் லெந்தில் நிலைக்க விடாமல் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்விப் பவுண்டரிகளை அடித்தவண்ணம் இருந்தனர். ஆனால் பிரேக் வந்தால் பிரச்சினைதான். தேநீர் இடைவேளை வந்து மீண்டும் இறங்கிய போது அட்டகாசமாக ரூட்டிற்கு ரூட்டைக் காட்டினார் கமின்ஸ், அருமையாக அவரை ஒர்க் அவுட் செய்து முதல் இன்னிங்ஸ் போலவே அச்சு அசலான பந்தில் எட்ஜ் எடுக்க வைத்தார். மட்டையைக் குத்தி கடும் வெறுப்பில் ரூட் வெளியேறினார்.

பெர்த் பிரிஸ்பன் படுதோல்விகளுக்குப் பிறகே பாஸ்பாலாவது மண்ணாவது என்று இங்கிலாந்து வாலைச்சுருட்டிக்கொண்டு ஆடியது அப்படியும் பயனில்லை. ஜாக் கிராலி இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து விட்ட தருணத்தில் 28 பந்துகளில் 1 ரன் எடுத்திருந்தார் என்றால் பாஸ்பால் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பாக பேட்டியளித்த பென் ஸ்டோக்ஸ், ‘இங்கிலாந்து வீரர்கள் தங்களுக்குள் இருக்கும் நாயை அவிழ்த்து விட வேண்டும்’ என்றார், ஆனால் நாயை அவிழ்த்து விட்டதென்னவோ ஆஸ்திரேலியா.

ரூட் கமின்ஸ் ட்ராப்பில் ஆட்டமிழந்த பிறகு ஹாரி புரூக், கிராலி இணைந்து கொஞ்சம் தாக்குப் பிடித்தனர். இருவரும் அரைசத கூட்டணி அமைத்தனர். தன் அட்டாக்கிங் இயல்பூக்கங்களைக் கட்டுப்படுத்தக் கஷ்டப்பட்டு அவ்வப்போது இதோ அவுட் ஆகிவிடுவேன் என்பது போல் ஆடினார். ஸ்காட் போலண்ட் விக்கெட் கீப்பர் கேரியை ஸ்டம்புக்குப் பக்கத்தில் நிற்க வைத்து புரூக்கின் அசாதாரண ஷாட்களைக் கட்டுப்படுத்தினார். ஆனால் இருவரும் ஒருவழியாக ஆஸ்திரேலியாவின் விக்கெட் ஆசையை சற்றே தடுத்து நன்றாகவே ஆடினர், ஆனால் அப்போதுதான் புரூக்கிற்கு பித்துப் பிடித்து அந்த ஷாட்டை ஆடினார். நேதன் லயனை ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறேன் என்று ஸ்டம்புகளை இழந்து வெளியேறினார்.

பென் ஸ்டோக்ஸ் பரிதாபத்துக்குரிய கேப்டனாக, மனிதராக இறங்கினார். ஆனால் அதிக நேரம் நீடிக்கவில்லை, லயனின் அட்டகாசமான ஆஃப் ஸ்பின் பியூட்டியில் பவுல்டு ஆகி வெளியேறினார் ஸ்டோக்ஸ். சரி! கிராலி ஒரு முனையில் சதம் எடுத்து நின்றாரானால் ஜேமி ஸ்மித்தை வைத்துக் கொண்டு இலக்கை நோக்கி ஒரு மிரட்டு மிரட்டலாம் என்றால் கிராலியும் நேதன் லயன் வீசிய அட்டகாசமான பந்துக்கு ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார், அலெக்ஸ் கேரியின் அசத்தல் ஸ்டம்பிங் அது. லயன் பந்தை பிளைட் செய்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வீச காலை நீட்டி ட்ரைவ் ஆட முயன்ற கிராலி பீட்டன் ஆனார், பின் காலும் தூக்கப்பட கேரி அட்டகாச பிளாஷ் ஸ்டம்பிங்கில் கிராலி பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

இன்று காலை பழைய பந்தில் இங்கிலாந்து பவுலர்கள் நல்ல லைன் மற்றும் லெந்த்தில் வீசி ஒருவழியாக ஆஸ்திரேலிய பிட்ச்களில் எப்படி வீச வேண்டும் என்பதில் தெளிவு பெற்று அருமையாக வீசினர். ஸ்டோக்ஸ் தானே வீச வந்தார். ஆனால் டிராவிஸ் ஹெட், கேரி இருந்த பார்முக்கு பவுண்டரிகள் வரவே செய்தன, ஹெட் பிளிக், புல், கட் என்று பவுண்டரிகளுடன் 150 ரன்களைக் கடந்தார். 8 ஓவர்களில் 40 ரன்களை விளாசினர்.

தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 175 ஐ நோக்கி ஹெட் சென்று கொண்டிருந்த போது ஜாஷ் டங் வீசிய பந்தை மைதானத்திற்கு வெளியே அடிக்கும் முயற்சியில் டீப்பில் கேட்ச் ஆகி 170 ரன்களில் முடிந்தார். கேரி-ஹெட் இடையேயான 162 ரன்கள் மிக முக்கியமான கூட்டணியும் உடைக்கப்பட்டது. கேரி இன்னொரு சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பென் ஸ்டோக்ஸ் அவரை வீட்டுக்கு அனுப்பினார்.

ஜாஷ் டங் அவ்வப்போது பும்ராவின் சில மிரட்டும் பந்துகள் போல் வீசினார், அப்படித்தான் ஜாஷ் இங்லிஸை அவர் எட்ஜ் ஆக்கினார். பிரைடன் கார்ஸ், அடுத்தடுத்த பந்துகளில் கமின்ஸ், லயன் இருவரையும் வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்புப் பெற்றார், ஆனால் போலண்ட் அதைத் தடுத்தார். ஆர்ச்சர் கடைசி விக்கெட்டை வீழ்த்த 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழந்து 349 ரன்களுக்குச் சுருண்டது.

இந்த டெஸ்ட்டில் 2வது இன்னிங்சில் இன்று காலை வீசிய பவுலிங்கை பெர்த் 2வது இன்னிங்ஸிலும் பிரிஸ்பனிலும் வீசியிருந்தால் நிச்சயம் இந்த நிலைமைக்கு இங்கிலாந்து வந்திருக்காது. இப்போது 0-2 என்ற நிலையில் நாளை 0-3 என்று தொடரை இழக்கும் நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து வருகின்றது இங்கிலாந்து அணி.

SCROLL FOR NEXT