ஸ்மிருதி மந்தனா
புதுடெல்லி: மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்துள்ளார்.
துபாயில் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஹாங்காங் அணிக்கெதிரான டி20 போட்டியில் விளையாடிய ஸ்மிருதி 64 பந்துகளில் 124 ரன்கள் குவித்தார்.
இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் வரிசையில் முதலிடம் பிடித்திருந்த இந்தியாவின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் சாதனையை முறியடித்தார். மிதாலி ராஜ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 10,868 ரன்கள் குவித்திருந்தார்.
தற்போது ஸ்மிருதி மந்தனா சர்வதேச போட்டிகளில் மொத்தம் 10,880 ரன்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மேலும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள், சர்வதேச டி20 என 3 வகையிலும்) அதிக சதங்கள் குவித்தவர் என்ற சாதனையையும் ஸ்மிருதி மந்தனா புரிந்துள்ளார். அவர் இதுவரை 18 சதங்கள் விளாசியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில 2 சதமும், டி20 போட்டிகளில் 2 சதமும், ஒருநாள் போட்டிகளில் 14 சதங்களையும் ஸ்மிருதி விளாசியுள்ளார். ஸ்மிருதிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் ஆகியோர் தலா 17 சதங்கள் எடுத்து 2-ம் இடத்தில் உள்ளனர்.