ஸ்மிருதி மந்தனா

 
விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா: பிசிசிஐ அறிவிப்பு

வேட்டையன்

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய முழுநேர கேப்டனாக ஸ்மிருதி மந்தனாவை அறிவித்துள்ளது பிசிசிஐ. அவர் ஹர்மன்ப்ரீத்துக்கு மாற்றாக அணியை இனி வழிநடத்த உள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து செவ்வாய்க்கிழமை (அக்.6) விலகுவதாக ஹர்மன்ப்ரீத் கவுர் அறிவித்தார். இந்நிலையில், அணியின் அடுத்த கேப்டனை அறிவித்துள்ளது பிசிசிஐ.

வரும் 16-ம் தேதி அன்று இந்தியா மற்றும் ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் முடிந்ததும் 23 முதல் 28-ம் தேதி வரையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரும் நடைபெறுகிறது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.

“இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு சிறப்புமிக்க கவுரவமாகும். எனது கிரிக்கெட் பயணத்தில் என்னோடு இருந்து ஆதரவு வழங்கி வரும் அணியின் தேர்வாளர்கள், அணியினர் மற்றும் பிசிசிஐ-க்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சிறப்புமிக்க பயணத்தில் ஹர்மன்ப்ரீத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கேப்டனாக முழு ஈடுபாட்டுடன் செயல்பட்ட அவரை பாராட்டுகிறேன். இந்திய கிரிக்கெட் அணியை முன்னோக்கி கொண்டு செல்லும் இந்த பொறுப்பை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்று ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்காக 9 டெஸ்ட், 120 ஒருநாள் மற்றும் 179 டி20 போட்டிகளில் ஸ்மிருதி மந்தனா விளையாடி உள்ளார். மொத்தம் 11,066 ரன்கள் எடுத்துள்ளார். எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். இந்திய மகளிர் அணியை 18 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் ஸ்மிருதி வழிநடத்தி உள்ளார். இப்போது முழுநேர கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மகளிர் பிரீமியர் லீகில் அவரது தலைமையிலான ஆர்சிபி, இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

SCROLL FOR NEXT