ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற கியூரோசாவ் அணி வீரர்கள்
கிங்ஸ்டன்: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்று கியூரோசாவ் சாதனை படைத்துள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜமைக்காவின் கிங்ஸ்டன் நகரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஜமைக்கா - கியூரோசாவ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து தனது பிரிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த கியூரோசாவ், முதன்முறையாக உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்தது. உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மக்கள் தொகை அடிப்படையில் மிகச்சிறிய நாடு என்ற சாதனையையும் கியூரோசாவ் படைத்துள்ளது.
இந்த தீவின் மக்கள் தொகை 1.56 லட்சம் மட்டுமே. இதற்கு முன்னர் மக்கள் தொகை அடிப்படையில் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து 2018-ம் ஆண்டு பெற்றிருந்தது. அப்போது அந்தநாட்டின் மக்கள்தொகை 3.50 லட்சமாக இருந்தது.