சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் புத்ரி குசுமா வர்தானியுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் சிந்து, ஜப்பானின் ரிகோ கன்ஜியுடன் மோதுகிறார்.
அதேவேளையில் இளம் இந்திய வீராங்கனையான உன்னதி ஹூடா 14-21, 10-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டோமோகா மியாசாகியிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 26-28, 21-15, 21-13 என்ற செட் கணக்கில் மலேசியாவின் சென் ஜி யி, பிரெஸ்லி ஸ்மித் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தது.
ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 21-11,14-21,12-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் விக்டர் அக்செல்சனிடம் தோல்வி அடைந்தார். மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கவிப்பிரியா செல்வம், சிம்ரன் சிங்கி ஜோடி 21-18, 13-21, 5-21 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பவுலா லோபஸ், லூசியா ரோட்ரிக்ஸ் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பாத், ஷிகா கவுதம் ஜோடி 16-21, 11-21 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் சாங் சிங் ஹுய், யாங் சிங் டுன் ஜோடியிடம் வீழ்ந்தது.