பாங்காக்: தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சிங்கப்பூரின் லோகீன் இயூவை எதிர்த்து விளையாடினார்.
30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த், சீன தைபேவின் சு லி யங்குடன் மோதுகிறார். மற்றொரு ஆட்டத்தில் லக் ஷயா சென் 21-16, 21-17 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜேசனை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 13-21, 21-17, 4-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பானின் கோடை நரோகாவிடமும், தருண் மன்னேப்பள்ளி 12-21, 16-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோகி வதனபேவிடமும் தோல்வி அடைந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபேவின் துங்சியூ-டாங்குடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 21-9, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான மாளவிகா பன்சோத் 13-21, 26-24, 21-13 என்ற செட் கணக்கில் கனடாவின் வென் யு ஜாங்கை தோற்கடித்து 2-வது சுற்றில் கால்பதித்தார்.
மற்ற இந்திய வீரராங்கனைகளான உனதி ஹூடா 21-11, 17-21, 16-21 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் போன்பாவி சோச்சுவோங்கிடமும், அன்மோல் கார்ப் 21-19, 13-21, 18-21 என்ற செட் கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் ஷென் யு ஃபெயிடமும், தன்வி சர்மா 17-21, 8-21 என்ற செட் கணக்கில் ஜப்பானின் ஹினா அகேச்சியிடமும் தோல்வி அடைந்தனர்.