விளையாட்டு

ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த ஸ்ரேயஸ் அய்யர்!

ஆர்.முத்துக்குமார்

கே.எல்.ராகுலுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் அய்யர் 1000 ரன்கள் மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார். மேலும் இரு அணிகளின் கேப்டனாக இரு அணிகளுக்கும் 1000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையையும் ஸ்ரேயஸ் அய்யர் படைத்துள்ளார்.

நேற்று மும்பை இந்தியன்ஸுடன் தோற்று தொடர்ச்சியாக இந்தத் தொடரில் 5 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் ஸ்ரேயஸ் அய்யர் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷர்துல் தாக்கூரை பவுண்டரிக்கு விரட்டியபோது 1000 ரன்கள் மைல்கல்லை பஞ்சாப் கிங்ஸுக்காக எட்டிய 2-வது கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

முன்னதாக கேஎல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக 27 போட்டிகளில் 1,296 ரன்கள் குவித்திருந்தார். இப்போது ஸ்ரேயஸ் அய்யர் 29 போட்டிகளில் 1000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளார். கே.எல்.ராகுலும் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இதில் லக்னோ அணிக்கு ஆடிய போதும் கேப்டனாக கே.எல்.ராகுல் 37 போட்டிகளில் 1395 ரன்களை எடுத்து இரு அணிகளின் கேப்டனாகவும் 1000 ரன்கள் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை வைத்திருந்தார்.

ஸ்ரேயஸ் அய்யர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக கேப்டனாக இருந்தபோது 41 போட்டிகளில் 1242 ரன்களை எடுத்ததோடு இப்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் கேப்டனாக 1000 ரன்கள் மைல்கல் சாதனையை எட்டினார். ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 28 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை எடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷும், கே.எல்.ராகுலும் அய்யரைக் காட்டிலும் குறைவான இன்னிங்ஸ்களில் 1000 ரன்கள் மைல்கல்லை எட்டினர். பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் 1000 ரன்கள் எடுத்த 11வது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயஸ் அய்யர் பெற்றுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஸ்ரேயஸ் அய்யர் 2015 முதல் 2021 வரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 87 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2375 ரன்களும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக இரண்டு சீசன்களில் (2022 மற்றும் 2024) 29 போட்டிகளில் மொத்தம் 752 ரன்களும் குவித்துள்ளார்.

SCROLL FOR NEXT