ஸ்ரேயஸ் ஐயர், அனில் கும்ப்ளே
மும்பை: ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி பெங்களூருவில் கோலாகலமாக தொடங்குகின்றன. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 2016-ம் ஆண்டு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் அணி இம்முறையும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனில் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. புதிய கேப்டனாக பொறுப்பேற்ற முதல் சீசனிலேயே பஞ்சாப் அணியை ஸ்ரேயஸ் ஐயர் உயரத்துக்கு கொண்டு சென்றிருந்தார். இதனால் இந்த சீசனிலும் அவர், மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் ஜியோ ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அனில் கும்ப்ளே கூறியதாவது: ஸ்ரேயஸ் ஐயர் நிச்சயமாக ஒரு குறைத்து மதிப்பிடப்பட்ட கேப்டன் ஆவார். ஒரு அணியில் விளையாடி கோப்பையை வென்றுவிட்டு, பின்னர் மற்றொரு அணிக்குச் செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அங்கு நிர்வாகம், சூழல் மற்றும் அணி என எல்லாமே வேறாக இருக்கும். அழுத்தமும் மாறுபடும்.
அவர், இணைந்த புதிய அணி (பஞ்சாப் கிங்ஸ்) கடந்த 10 ஆண்டுகளாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறாமல் இருந்தது. ஆனால், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்த தனது முதல் சீசனிலேயே அவர்களை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார் ஸ்ரேயஸ் ஐயர். அவருடைய கேப்டன்சி மட்டுமல்ல, ஒரு தலைவனாக முன்னின்று அவர் அணியை வழிநடத்திய விதம் என்னை மிகவும் கவர்ந்தது.
ஒவ்வொரு முறையும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் சில வீரர்கள் இருப்பார்கள். ஸ்ரேயஸ் ஐயர் அப்படித்தான். சிறப்பாகச் செயல்பட்ட பிறகும், அவர் மீது கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவர், குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் என்று நான் நினைக்கிறேன், ஆனால் அவர், விதிவிலக்கான கேப்டன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் தொடரை வென்று தங்களது மூன்றாவது கோப்பையைக் கைப்பற்றியது. அந்த வெற்றியின் முக்கியத் தூண்களாக ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் பில் சால்ட் இருந்தனர். வெற்றிக்கு அவர்கள் இருவரும் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கினர். ஆனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவர்கள் இருவரையும் விடுவித்துவிட்டது. வீரர்களைத் தக்கவைப்பதில் அந்த அணியிடம் எவ்விதத் தொடர்ச்சியும் இல்லை.
ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் பில் சால்ட்டை வெளியேற்றியதன் மூலம் கேகேஆர் தவறான முடிவை எடுத்துள்ளது. இது ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரு கேப்டன் அந்த அணியில் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளது. ஆம், அஜிங்க்யா ரஹானே அனுபவம் வாய்ந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் உள்நாட்டுப் போட்டிகளில் மும்பை அணியையும், ஐபிஎல்-லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் வழிநடத்தியுள்ளார்.
ஆனால், ஒரு கேப்டனாக அவர் ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கோப்பையை வென்ற ஒரு கேப்டன் அணியை வழிநடத்துவது கூடுதல் பலத்தைத் தரும். அந்தச் சாதகமான அம்சத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இழந்துவிட்டது. தங்களது முக்கிய வீரர்களை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பதை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவர்கள் தொடர்ந்து தடுமாற்றத்தைச் சந்திப்பார்கள். மேலும் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக அவர்களைக் கருத முடியாது. இவ்வாறு அனில் கும்ப்ளே கூறினார்.