விளையாட்டு

முன்னாள் இங்கிலாந்து வீரர் ராபின் ஸ்மித்தின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி!

ஆர்.முத்துக்குமார்

‘தன் காலத்தை விஞ்சிய பேட்டர்’ என்று பண்டிதர்களால் புகழப்பட்ட முன்னாள் இங்கிலாந்து வீரர் ராபின் ஸ்மித் பெர்த்தில் திங்களன்று திடீரென மரணமடைந்தார். இவருக்கு வயது 62.

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ராபின் ஸ்மித் 1988 முதல் 1986 வரை இங்கிலாந்துக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். 4,236 ரன்களை 43.67 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 9 சதங்கள் அடங்கும். 71 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 2,419 ரன்கள் எடுத்துள்ளார். அவரது திடீர் மரணம் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராபின் ஸ்மித் குடும்பத்தினர் தெரிவித்துள்ள செய்தியில், “ஆழமான துயரம், இழப்பை ஏற்படுத்திவிட்டு ஸ்மித் மறைந்தார். ராபின் ஸ்மித் தெற்கு பெர்த்தில் உள்ள தன் வீட்டில் திடீரென மரணமடைந்தார்.” என்று கூறியுள்ளனர். மரணத்திற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை.

சமீபத்தில்தான் பெர்த் டெஸ்ட்டிற்கு முன்னதாக இங்கிலாந்து லயன்ஸ் அணி வீரர்களைச் சந்தித்தார். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய சேர்மன் ரிச்சர்ட் தாம்சன் தன் இரங்கல் செய்தியில், “ராபின் ஸ்மித் உலகின் அதிவேகப் பவுலர்களுக்கு நிகராக தன்னை நிரூபித்தவர். ஆக்ரோஷமான பந்து வீச்சுகளை முகத்தில் புன்னகையுடன் எதிர்கொண்டவர் ராபின் ஸ்மித்.”என்று கூறியுள்ளார்.

எட்ஜ்பாஸ்டனில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1993ம் ஆண்டில் 163 பந்துகளில் 167 ரன்களை விளாசியது அவர் இன்னிங்ஸ்களில் மறக்க முடியாத ஆல்டைம் கிரேட் இன்னிங்ஸ் ஆகும். இதுதான் 23 ஆண்டுகளுக்கு இங்கிலாந்தின் தனிப்பட்ட வீரர் எடுத்த அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராக இருந்தது. 2016-ல் அலெக்ஸ் ஹேல்ஸ்தான் இதனை முறியடித்தார்.

1963ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார் ராபின் ஸ்மித். டர்பனில் தன் தந்தை உருவாக்கிய கிரிக்கெட் பிட்ச் மற்றும் வலையில் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு ஒரு கிரிக்கெட் வீரராகவே வளர்த்தெடுக்கப்பட்டவர். இவருடன் தென் ஆப்பிரிக்கா கிரேட்களான பாரி ரிச்சர்ட்ஸ், மைக் புரோக்டர் போன்றோரும் வலையில் பயிற்சி மேற்கொண்டுள்ளனர் என்றால் அவரது உருவாக்கம் தொழில்பூர்வத் தன்மையை ஆரம்பக் காலங்களிலிருந்தே எட்டியிருந்தது என்று தெரிகிறது.

இவரது சகோதரரும் 1980-களில் இவர்களது குடும்பம் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த போது இங்கிலாந்துக்காக ஆடினார். ஆனால் ஹெடிங்லேயில் 1988-ல் ராபின் ஸ்மித்தின் அறிமுகம் பரவலான ஆர்வத்தைத் தூண்டியது. முதல் டெஸ்ட்டில் மார்ஷல், ஆம்புரோஸ், கார்ட்னி வால்ஷ், வின்ஸ்டன் பெஞ்சமின் அடங்கிய ஆக்ரோஷ வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு 38 மற்றும் 11 ரன்களையே அவரால் எடுக்க முடிந்தது.

1996ம் ஆண்டு தான் பிறந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் கடைசி டெஸ்ட் போட்டியை ஆடினார். கடைசியாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா சேர்மன் லெவன் அணிக்கு கேப்டன்சி செய்து ஆடியது 2008-ல்.

மறைந்த ஷேன் வார்னும் இவரும் கடைசி வரை நெருக்கமான நண்பர்கள். இந்த நட்புதான் பிற்பாடு ஷேன் வார்ன் ஹாம்ப்ஷயர் அணிக்கு ஆடுவதற்கான காரணமாக அமைந்தது.

SCROLL FOR NEXT