விளையாட்டு

ரஹானே திடீர் ஓய்வு அறிவிப்பு: அடுத்த தலைமுறைக்கு உறுதுணை புரிய விருப்பம்

அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு

மோகன் கணபதி

மும்பை: சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக மூத்த பேட்ஸ்மேனான அஜிங்க்ய ரஹானே அறிவித்துள்ளார். தனது கிரிக்கெட் பயணத்தில் அடுத்தகட்டத்துக்கு நகர இதுவே சரியான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் ஒரு தொடக்கம் இருப்பதைப் போல முடிவும் இருக்கும். நேரம் வரும்போது நாம் அதற்கு மதிப்பு கொடுத்து அடுத்த கட்டத்துக்கு நகர தயாராக வேண்டும்.

பேட்டிங்குக்கு நான் எப்போதும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். ஆனால், அடுத்த கட்டத்துக்கு நகர இதுவே சரியான தருணம் என நான் உணர்கிறேன். எனவே, சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன்.

மகாராஷ்டிராவின் தோம்பிவிலி பகுதியில் ஒரு சிறுவனாக பயிற்சி செய்து கொண்டிருந்த எனக்கு இந்த விளையாட்டு அனைத்தையும் கொடுத்தது.

விளையாடுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பின்போதும் எனது கனவு, இந்திய தொப்பியை அணிய வேண்டும் என்பதாகவே இருந்தது. எனது நாட்டையும் எனது டீமையும் முன்னிறுத்தியே விளையாடுவது என்ற எளிமையான கொள்கையை நான் கொண்டிருந்தேன்.

விளையாட்டை நான் முழு நேர்மையோடு விளையாடினேன். உங்கள் நோக்கம் சரியாக இருந்தால் விளையாட்டு உங்களை சரியான இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதை நான் நம்பினேன்.

இந்திய கிரிக்கெட் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இதில், கடந்த 20 ஆண்டுகளாக நானும் ஒரு பகுதியாக இருந்ததில் பெருமை கொள்கிறேன்.

இந்திய கிரிக்கெட் வீரராக எனது பயணம் முடிவுக்கு வரலாம். ஆனால், விளையாட்டுடனான எனது தொடர்பு ஒருபோதும் முடிவுக்கு வராது.

அடுத்த தலைமுறைக்கு உறுதுணை புரிய நான் விரும்புகிறேன். இந்த விளையாட்டையும் அதன் மதிப்பீடுகளையும் அவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏனெனில், இந்த விளையாட்டுதான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது.

இந்திய அணிக்காக மும்பையில் விளையாடத் தொடங்கியது மிகப் பெரிய கவுரவம். இத்தனை ஆண்டுகளில் நிறைய வெற்றிகளையும் தோல்விகளையும் நான் பார்த்துள்ளேன். எந்த அணியுடன் விளையாடினாலும் அது தந்த மகிழ்ச்சியும் நினைவுகளும் எப்போதும் நினைவில் இருக்கும்.

இந்த தருணத்தில், பிசிசிஐ, ஐபிஎல், எனது மனைவி ராதிகா, எனது குடும்பம், எனது நண்பர்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

2013-ல் இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கிய அஜிங்க்ய ரஹானே 85 டெஸ்ட் போட்டிகள், 90 ஒருநாள் போட்டிகள், 20 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2023-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற வெளிநாட்டு டெஸ்ட் தொடருக்குப் பிறகு அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.

தேசிய அணிக்கு தேர்வாகாவிட்டாலும், உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார். 2024-25 சீசன் வரை மும்பை அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT