சென்னை: தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களிலும் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 21 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த பயிற்சி முகாம் யு-14, யு-16 மற்றும் யு-19 வயதுக்குட்பட்ட மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர்களின் திறன், உடற்தகுதி மற்றும் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும்.
இந்த முகாமுக்கு பயிற்சியாளர்களைத் தயார் செய்யும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று பயிற்சியாளர்களுக்கான கருத்தரங்கை நடத்தியது.
இந்தக் கருத்தரங்கை பிசிசிஐ-சிஓஇ நிலை-3 பயிற்சியாளரா எம்.சஞ்சய் நடத்தினார். பிசிசிஐ ஜூனியர் தேர்வுக் குழுவின் தலைவர் எஸ்.சரத்தும் பங்கேற்று தனது கருத்துகளைப் பயிற்சியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
டி.என்.சி.ஏ அகாடமியின் இணை இயக்குனர் எம்.சண்முகம், தலைமை உடற்பயிற்சி நிபுணர் நந்தகுமார், உடற்தகுதி மற்றும் மனவலிமை பயிற்சியாளர்கள் மானவ் கிஷோர், சண்முக பிரியங்கா ஆகியோரும் பயிற்சியாளர்களிடையே உரையாற்றினர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பயிற்சியாளர்களுக்கான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.