2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடருக்கு 18 மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், அதன் கட்டமைப்பை மாற்றியமைக்க ஐசிசி (ICC) எடுத்துள்ள முடிவின் மீது கிரிக்கெட் ஸ்காட்லாந்து மற்றும் ராயல் டச்சு கிரிக்கெட் சங்கம் (KNCB) ஆகியவை அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
கடந்த மாதம், ஐசிசி உலகக் கோப்பையின் ‘சூப்பர் சீரிஸ்’ கட்டத்தை அறிமுகப்படுத்தியது; இதில் தகுதி பெறும் அணிகளில் 12, 13 மற்றும் 14-வது இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒரு முத்தரப்புத் தொடரில் மோதும். இத்தொடரில் வெற்றி பெறும் ஒரே ஒரு அணி மட்டுமே உலகக் கோப்பையின் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும்; அங்கு 12 அணிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படும்.
12 அணிகள் தலா ஆறு அணிகள் வீதம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். இதில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 3 அணிகள் தகுதி பெற இந்த 6 அணிகளுடன் அடுத்தக் கட்டத்தில் புள்ளிகள் அளவிலோ, நிகர ரன் விகிதத்திலோ சிறப்பாக உள்ள ஒரே அணி சூப்பர் 7 சுற்றில் ஆடும், இந்த ரவுண்ட் ராபின் சுற்றில் எல்லா அணிகளும் எல்லா அணிகளுடன் மோத வேண்டும், இதில் டாப் 4 அரையிறுதிக்குச் செல்லும், அதிலிருந்து 2 அணிகள் இறுதிக்குச் செல்லும். இதுதான் இப்போது செய்துள்ள மாற்றம்.
இதில் புதிய மாற்றம் என்னவெனில் 10 அணிகள் மட்டுமே ரவுண்ட் ராபினில் விளையாடும் தொடராக இருந்த உலகக் கோப்பை இப்போது 11 அணிகள் நேரடியாகத் தகுதி பெறும் என்று மாற்றப்பட்டுள்ளது. இதில் பெரிய தந்திரம் என்னவெனில் இங்கிலாந்து தகுதிச் சுற்று ஆடித்தான் தகுதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்படி ஏதாவது இங்கிலாந்து தகுதி பெற முடியாமல் போய் விட்டால் அது உலகக் கோப்பைக்கே, கிரிக்கெட்டின் பெரிய அணிக்கே ஏற்படும் இழுக்கு என்று இங்கிலாந்தை நேரடித் தகுதி பெறச் செய்ய இந்த மாற்றத்தை அவசரம் அவசரமாகக் ஐசிசி கொண்டு வந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால், வங்கதேசம் மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் ஒருநாள் தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றதால் வங்கதேசம் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி முன்னால் செல்ல முடியாமல் போனதால் இங்கிலாந்து தப்பியது என்பது வேறு கதை.
வடிவமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பிற அசோசியேட் உறுப்பினர் கிரிக்கெட் வாரியங்கள், அந்த மாற்றங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ தகவலையும், அதற்கான நடைமுறைகள் குறித்த கூடுதல் தெளிவையும் கோரி ஐசிசியுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தின. ஆனால், இரண்டாவது சந்திப்பு நடைபெற்று “இரண்டு வாரங்களுக்கும் மேலாக” ஆகியும் ஐசிசியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்று கிரிக்கெட் ஸ்காட்லாந்தும், நெதர்லாந்தும் திங்ட்கிழமை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளன. இந்த நிலைப்பாட்டை “ஏமாற்றமளிப்பதாகவும் அவமரியாதையானதாகவும்” அந்த இரு வாரியங்களும் குறிப்பிட்டுள்ளன.
உலகக் கோப்பை வடிவமைப்பில் மாற்றம் அறிவிக்கப்படும் நேரத்தில், உலகக் கோப்பை 2-ம் லீக் சுற்றுப் போட்டிகள் ஏறக்குறைய முடிவடைந்திருந்தன. அமெரிக்கா, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஓமன் அணிகள் ஒருநாள் உலகக் கோப்பை தகுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன. கடைசி நான்கு இடங்களைப் பிடித்த நமீபியா, கனடா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் எட்டு அணிகள் பங்கேற்கும் உலகக் கோப்பை தகுதிச்சுற்று பிளே-ஆஃப் போட்டியில் விளையாட உள்ளன. அந்தப் போட்டியில் முதல் நான்கு இடங்களைப் பெறும் அணிகள், 2027 பிப்ரவரியில் நடைபெற உள்ள உலகளாவிய தகுதிச்சுற்றில் விளையாட தகுதி பெறும். இப்போது இந்த நடைமுறையெல்லாம் கேள்விக்குள்ளாகியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்த மாற்றங்கள் அசோசியேட் உறுப்பினர் கிரிக்கெட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதுடன், கடந்த சில ஆண்டுகளில் உலகளாவிய கிரிக்கெட்டை வளர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. கிரிக்கெட் தனது பரவலை விரிவுபடுத்தவும், புதிய ரசிகர்களை ஈர்க்கவும், சர்வதேச விளையாட்டு அரங்கில் தனது நிலையை வலுப்படுத்தவும் முயற்சித்து வரும் நிலையில், வளர்ந்து வரும் நாடுகளுக்கு கிடைக்கும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை குறைப்பது முற்றிலும் தவறான செய்தியை அளிக்கிறது” என்று இரு வாரியங்களும் தெரிவித்தன.
“கிரிக்கெட்டை உலகளவில் வலுப்படுத்தும் நோக்கில் ஐசிசியுடனும் சக உறுப்பினர் நாடுகளுடனும் ஆக்கப்பூர்வமாக இணைந்து செயல்படுவதில் கிரிக்கெட் ஸ்காட்லாந்தும் நெதர்லாந்தும் தொடர்ந்து முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளன. இருப்பினும், இந்த மாற்றங்களால் ஏற்படும் தாக்கம் குறித்தும், அவை அறிமுகப்படுத்தப்பட்ட விதம் குறித்தும் எங்களுக்கு குறிப்பிடத்தக்க கவலைகள் உள்ளன.
“மாற்றங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிரிக்கெட் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து மற்றும் பிற அசோசியேட் உறுப்பினர் நாடுகள் ஐசிசி உடன் இரண்டு முறை சந்தித்தன. மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ தகவலையும், அதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்த கூடுதல் தெளிவையும் நாங்கள் கோரினோம். எதிர்காலத்தில் செயல்பாட்டு முடிவுகள் எடுக்கப்படும் முறையை வலுப்படுத்தும் வகையில் நேர்மறையான நடவடிக்கைகளையும், முழு உறுப்பினர் நாடுகளுடன் நடைபெறும் இருதரப்பு திட்டமிடல் கூட்டங்களுக்கு எங்களையும் அழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம். இரண்டாவது சந்திப்பு நடைபெற்று இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில், ஐசிசியிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டால், இது ஏமாற்றமளிப்பதுடன் அவமரியாதையானதாகவும் உள்ளது.”
கடந்த மாதம் உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளின் கேப்டன்களும் உலகக் கோப்பை வடிவமைப்பில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதையடுத்து, நமீபியா கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரூடி வான் வுயூரன், மாற்றப்பட்ட உலகக் கோப்பை அட்டவணையை வீரர்கள் சரியான பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும் என்றும், வளர்ச்சிக்கான ஒரு கருவியாக டி20 கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
“இந்த மாற்றங்கள் சர்வதேச கிரிக்கெட்டின் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை பலவீனப்படுத்தும் அபாயம் உள்ளது. மேலும், வலுவான நிர்வாகம், வெளிப்படையான முடிவெடுத்தல் மற்றும் உறுப்பினர் நாடுகளுடன் பயனுள்ள கலந்துரையாடல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
குறிப்பாக அசோசியேட் உறுப்பினர் நாடுகளை நேரடியாக பாதிக்கும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், அர்த்தமுள்ள ஆலோசனைகளுக்கு பிறகும், பாதிக்கப்படும் உறுப்பினர் நாடுகள் அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு பதிலளிக்க போதுமான கால அவகாசத்துடனும் தெளிவாக எடுக்கப்பட வேண்டும்.
போட்டிக்கு இன்னும் 18 மாதங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நேரம், பாதிக்கப்படும் உறுப்பினர் நாடுகளுக்கு முடிவெடுக்கும் செயல்முறையில் பங்களிக்கவும் அல்லது அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் குறைந்த வாய்ப்பையே வழங்கியுள்ளது. அசோசியேட் உறுப்பினர் நாடுகளுடன் அதிக அளவில் ஆலோசனை நடத்தப்பட்டிருந்தால், மிகவும் பயனுள்ள மற்றும் ஒத்துழைப்பான அணுகுமுறையை உருவாக்கியிருப்பதுடன், தகுதிச்சுற்று நடைமுறை மீதான நம்பிக்கையையும் தொடர்ந்து நிலைநிறுத்தியிருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
கிரிக்கெட் உண்மையிலேயே உலகளாவிய விளையாட்டாக மாற வேண்டும் என்ற தங்களது இலக்கை கிரிக்கெட் தலைவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, அசோசியேட் உறுப்பினர் நாடுகளுடனும், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுடனும் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுமாறு ஐசிசியை கேட்டுக்கொள்கிறோம். மேலும், உலகளாவிய கிரிக்கெட்டின் நீண்டகால நலன்களை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாக்க முடியும் என்பது குறித்து அனைத்து உறுப்பினர் நாடுகளுடனும் வெளிப்படையாக கலந்துரையாட ஐசிசி உறுதியளிக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.