சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கா ரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் கால் இறுதியில் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-17, 21-3 என்ற செட் கணக்கில் மலேசியாவின் காங் காய் ஜிங்-ஆரோன்டை ஜோடியை வீழ்த்தியது.இதன்மூலம் அரை இறுதிக்குச் சுற்றுக்கு சாத்விக், சிராக் ஜோடி முன்னேறியுள்ளது.
சிந்து தோல்வி
மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி கண்டு வெளியேறினார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் பி.வி. சிந்துவும், கொரிய வீராங்கனை ஆன் சே யங்குடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் கொரிய வீராங்கனை மிகச்சிறப்பாக விளையாடி புள்ளிகளை சேர்த்தார். இறுதியில் ஆன் சே யங் 21-17 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் சிந்துவை வீழ்த்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் 2 பதக்கம் வென்றவரான சிந்து, கால் இறுதியில் தோல்வி கண்டு அங்கு கூடியிருந்த ரசிகர்களை ஏமாற்றினார்.