மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷேய் ஹோப்

 
விளையாட்டு

“லாரா, கெயிலுக்கு பிறகு சிறந்த பேட்டர்; உரிய அங்கீகாரம் இல்லை” - ஹோப் குறித்து சம்மி வேதனை

ஆர்.முத்துக்குமார்

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷேய் ஹோப் அபாரமாக செயல்பட்டு அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதையடுத்து, அவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி வேதனை தெரிவித்துள்ளார்.

நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், வழக்கமான தொடக்க வீரர் ஜுவெல் ஆண்ட்ரூஸ் காயம் காரணமாக பேட்டிங் செய்ய முடியாத நிலையில், விக்கெட் கீப்பராக 50 ஓவர்கள் களத்தில் இருந்த ஷேய் ஹோப் தொடக்க வீரராக களமிறங்கினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார்.

இதற்கு முன்பு இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 90 பந்துகளில் சதம் அடித்த ஹோப், தனது ஒருநாள் போட்டி சதங்களின் எண்ணிக்கையை 20 ஆக உயர்த்தினார். இதன் மூலம் பிரையன் லாராவின் 19 சதங்கள் சாதனையை அவர் முந்தினார். கிறிஸ் கெயிலின் 25 சதங்கள் சாதனையை முறியடிக்க இன்னும் 5 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஹோப் 157 போட்டிகளில் இந்த சாதனையை எட்டியுள்ள நிலையில், லாரா 295 போட்டிகளிலும், கெயில் 298 போட்டிகளிலும் இந்த எண்ணிக்கையை எட்டினர். ஹோப்பின் ஒருநாள் சராசரி 50-க்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று உலகில் சிறப்பாக ஆடும் ஒருநாள் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ரோஹித், விராட் கோலி, பிரிட்ஸ்கே உள்ளிட்டோர் பட்டியலில் நிச்சயம் ஷேய் ஹோப்பிற்கு முதன்மையான இடம் உண்டு. ஆனால், அவருக்கு உலக கிரிக்கெட் வல்லுநர்களின் ‘டாப் வீரர்’ என்னும் அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை.

ஷேய் ஹோப்பின் ஆட்டம் குறித்து டேரன் சம்மி கூறுகையில், “அவர் 98.2 ஓவர்கள் களத்தில் இருந்தார். பேட்டிங்கிலும் பலமுறை செய்ததைப் போலவே, கடைசி ஒருநாள் போட்டியில் ஒட்டுமொத்த அணியையும் தனது தோளில் சுமந்தார். 50 ஓவர்கள் விக்கெட் கீப்பராக செயல்பட்ட பிறகு, பேட்களை அணிந்து கொண்டு தொடக்க வீரராக களமிறங்கி இப்படியொரு இன்னிங்ஸை விளையாடியது மிகவும் சிறப்பானது. மேற்கு இந்தியத் தீவுகளுக்காக அவர் செய்துள்ள சாதனைகள், அவரது ஆட்டம் மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைக்க வேண்டிய அளவுக்கு அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் ஒரு தரமான வீரர்; சிறந்த தனிநபர்” என்று பாராட்டினார்.

ஹோப்பின் தலைமைப் பண்புகள் குறித்தும் சம்மி கூறுகையில், “அவர் அதிகம் பேசமாட்டார். ஆனால் பேசும்போது, தன்னிடமிருந்தும் அணியிடமிருந்தும் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை மிகவும் தெளிவாகச் சொல்வார். அவர் தனது செயல்பாட்டின் மூலமே அணியை வழிநடத்துகிறார். இன்று தொடக்க வீரராக யாராவது களமிறங்க வேண்டியிருந்தபோது, நான் அவரிடம் கூறியதும் ஒரு வார்த்தைகூட பேசாமல் பேட்களை அணிந்து கொண்டு களத்துக்குச் சென்று எங்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தார்” என்றார்.

இந்தியாவைப் போன்ற உலகின் நம்பர் 1 அணிக்கு எதிராக தங்கள் திறமையை நிரூபித்திருப்பது மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும் சம்மி தெரிவித்தார். நீண்ட நேரம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால் முன்னணி அணிகளுக்கு எதிராகவும் தங்களால் போட்டியிட முடியும் என்பதை இந்தத் தொடரில் ஷேய் ஹோப் நிரூபித்துள்ளதாக டேரன் சம்மி புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT