சச்சின், கோலி, ரஹானே

 
விளையாட்டு

“சச்சினை ‘ரோல் மாடல்’ ஆக கொண்ட கோலி 100 சதங்களை எட்ட முடியும்” - ரஹானே நம்பிக்கை

ஆர்.முத்துக்குமார்

வயதாக வயதாக உடல் ஃபிட்னெஸும் கிரிக்கெட் ஆட்டத்தின் பரிமாணங்களும் இன்னமும் கூர்மையடைந்து வரும் நிலையில் விராட் கோலி ஏன் சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனை இலக்கை எட்ட முடியாது என்ற ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது போலவே கோலியுடன் நிறைய பேட்டிங் கூட்டணிகள் அமைத்த அஜிங்கிய ரஹானேவுக்கும் எழுவது இயல்புதானே?!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது விராட் கோலியின் பிரமிப்பூட்டும் சதம்.

88 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 139 ரன்கள் குவித்த கோலி, 9 சிக்ஸர்களை விளாசினார். இது அவரது ஒருநாள் கிரிக்கெட் கரியரில் ஒரு இன்னிங்ஸில் அவர் அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாகும்.

296 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 50 பந்துகள் மீதமிருந்த நிலையில் எட்டியது. இந்த அதிரடி சதத்தின் மூலம் கோலி தனது 55-வது ஒருநாள் சதத்தையும், சர்வதேச கிரிக்கெட்டில் 86-வது சதத்தையும் பதிவு செய்தார். இதையடுத்து, சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை எட்டும் அளவுக்கு கோலியிடம் இன்னும் திறன் உள்ளதா என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது.

தனிப்பட்ட சாதனைகளுக்காக தான் விளையாடுவதில்லை என்று கோலி ஏற்கனவே கூறியுள்ள நிலையில், அவர் 100 சதங்கள் என்ற இலக்கை மனதில் வைத்துக்கொண்டு விளையாடினால் நிச்சயம் அதை எட்ட முடியும் என்று அவரது முன்னாள் சக வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரஹானே கூறியதாவது: “விராட் கோலி தனக்குத்தானே அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போதுதான் சிறப்பாக விளையாடுகிறார். ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தன்னிடம் அதிக எதிர்பார்ப்பை வைத்துக்கொள்கிறார். அதனால்தான் பல ஆண்டுகளாக அவரால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிகிறது.

100 சர்வதேச சதங்கள் என்ற சாதனை இலக்கை கோலி மனதில் வைத்துக் கொண்டால் அதில் தவறில்லை. அவரது ரோல் மாடல் சச்சின் டெண்டுல்கர். எனவே, கோலி நிச்சயம் அந்த சாதனையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அவர் அதை இலக்காக வைத்தால், அதை சாதிக்கக் கூடியவர் விராட் கோலி மட்டுமே” என்கிறார்.

தற்போது இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் கோலிக்கு சுமார் 30 போட்டிகள் எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் போட்டிகளில் மேலும் 14 சதங்கள் அடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் என்ற மைல்கல்லை அவர் எட்டுவார். இந்த சாதனையை இதுவரை அவரது குருவான சச்சின் டெண்டுல்கர் மட்டுமே படைத்துள்ளார்.

SCROLL FOR NEXT