தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள தந்தேவாடா மாவட்டமானது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள மாவோயிஸ்ட்கள் தங்களது ஆயுதங்களை கீழே போட்டு சரண் அடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுத் திட்டத்தை மத்திய அரசும், சத்தீஸ்கர் அரசும் செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30-ம் தேதி மாவோயிஸ்ட்கள் இல்லாத மாநிலமாக சத்தீஸ்கரை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் மான் தேஷி அறக்கட்டளையும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பவுண்டேஷனும் இணைந்து தந்தேவாடாவில் விளையாட்டு மையத்தை உருவாக்கியுள்ளன.
இதற்காக தந்தேவாடா மாவட்டத்தில் மட்டும் 50 பள்ளிக்கூடங்களில் மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மைதான் கப் என்ற முன்னோடித் திட்டத்தின் கீழ் இந்த மைதானங்களை 2 அறக்கட்டளையும் உருவாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மைதான் கப் திட்டத்தின் கீழ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று மைதான் கப் திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சத்தீஸ்கரிலுள்ள ஜக்தால்பூர் விமானநிலையத்துக்கு சச்சின் டெண்டுல்கர் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு காலத்தில் சத்தீஸ்கரின் தந்தேவாடா பகுதி என்றாலே நினைவுக்கு வருவது மாவோயிஸ்ட் இயக்கத்தினர். ஆனால், இன்று இந்த நிலை மாறி வருகிறது.
மான் தேஷி பவுண்டேஷனும், சச்சின் டெண்டுல்கர் பவுண்டேஷனும் இணைந்து தற்போது மைதான் கப் திட்டத்தைத் தொடங்கி உள்ளோம். இங்கு 50 பள்ளிக்கூட மைதானங்களை மைதான் கப் திட்டத்தின் கீழ் உருவாக்கியுள்ளோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். தந்தேவாடாவில் மைதான் கப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மாவோயிஸ்ட் பாதித்த இந்த மாவட்டத்தில், விளையாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில்தான் கடந்த ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கினோம்.
மான் தேஷி அறக்கட்டளையுடன் இணைந்து எங்களது (சச்சின்) அறக்கட்டளை இங்கு சிறப்பாகச் செயல்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கபடி, கோ-கோ, தடகளம், வாலிபால் போன்ற விளையாட்டுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சச்சின் தெரிவித்தார்.