புதுடெல்லி: அகமதாபாத் காமன்வெல்த் போட்டியை நடத்த ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று தெரியவந்துள்ளது.
2030-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காமன்வெல்த் விளையாட்டு ஆணையம் கடந்த வாரம் வெளியிட்டது. இந்நிலையில் இந்தப் போட்டியை அகமதாபாத்தில் நடத்துவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என்று தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி வட்டாரங்கள் கூறியதாவது: போட்டியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. போட்டியை நடத்துவதற்கான மைதானங்களில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், ரசிகர்கள் பயன்படுத்தும் கேலரி உள்ளிட்ட பகுதிகளை சீரமைத்தல் போன்ற பணிகள் செய்யப்படும். புதிதாக விளையாட்டு அரங்குகளை அமைப்பதற்கான செலவுகள் இதில் அடங்காது.
தற்போதைய கணக்குப்படி ரூ.3 ஆயிரம் கோடி முதல் ரூ.5 ஆயிரம் கோடி வரை செலவாகும் என உத்தேசித்துள்ளோம். 2010ல் டெல்லியில் காமன்வெல்த் போட்டிக்காக ரூ.2,600 கோடி செலவிடப்பட்டது. ஆனால் உத்தேசித்த தொகை ரூ.635 கோடியாகவே இருந்தது. மேலும் போட்டிக்காக விளையாட்டு மைதானங்களை அமைத்தல் உள்ளிட்ட செலவுகள் அனைத்தையும் சேர்த்து ரூ.70 ஆயிரம் கோடி வரை செலவிடப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.