கோப்புப்படம்
லே: லடாக் யூனியன் பிரதேசத்தில் நடைபெறவுள்ள மராத்தான் ஓட்டப்பந்தயப் போட்டிக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கிலுள்ள லே பகுதியில் வரும் செப்டம்பர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதிக்குள் ஏதாவது ஒருநாளில் லடாக் மராத்தான் பந்தயம் நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்து மராத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
சுமார் 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியின் பரிசுத்தொகையாக ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக லடாக் மராத்தான் பந்தய போட்டி அமைப்பாளரும், லடாக் யூனியன் பிரதேச சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை நிர்வாகச் செயலருமான சஞ்சித் ரோட்ரிக்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: இந்த மராத்தான் பந்தயத்தில் கலந்துகொள்ள வருமாறு 28 இந்திய மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். அதுமட்டுமல்லாமல் சர்வதேச மராத்தான் வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
லடாக் துணை நிலை ஆளுநரின் உத்தரவுப்படி போட்டி பரிசுத்தொகையாக ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக் மாரத்தான் போட்டிக்கு உலகளாவிய அந்தஸ்தை ஏற்படுத்துவதற்கும், லடாக்கில் விளையாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் இந்தப் பரிசுத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டியானது முழு மராத்தான், அரை மராத்தான், 11.2 கிலோமீட்டர் ஓட்டம் மற்றும் 5 கிலோமீட்டர் ஓட்டம் ஆகியவற்றுடன், உலகின் மிகவும் சவாலான 2 அதிதூரப் பந்தயங்களான 72 கிலோமீட்டர் கர்துங் லா சேலஞ்ச், 122 கிலோமீட்டர் சில்க் ரூட் அல்ட்ரா பந்தயங்களையும் நடத்துகிறோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மராத்தான் பந்தயத்துக்கு ரூ.1 கோடி மொத்தப் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.