நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 6-வது நாளான நேற்று வுஷுவில் மகளிருக்கான 60 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் நவுரேம் ரோஷிபினா தேவி, சீனாவின் சியாவு ஜாங்குடன் மோதினார்.
இதில் ரோஷிபினா தேவி 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். 2 சுற்றுகளிலும் சியாவு ஜாங்குக்கு நடுவர்கள் முழுமையாக 5-0 என முடிவுகளை வழங்கினர். முதல் சுற்றில் சியாவு 6-2, 6-3, 6-2, 6-2, 8-2 எனவும், 2-வது சுற்றில் 10-2, 8-3, 7-3, 7-3, 6-1 எனவும் புள்ளிகளை குவித்தார்.
ஆசிய விளையாட்டில் ரோஷிபினா தேவி பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். கடந்த முறை வெள்ளிப் பதக்கத்தையும், 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற ரோஷிபினா தேவியால், இம்முறை தனது எதிராளியின் ஆக்ரோஷமான ஆட்டத்தையும் தொழில்நுட்பத் திறனையும், ‘பக்கவாட்டு கிக்’ தாக்குதல் களையும் சமாளிக்க முடியாமல் போனது.
ரோஷிபினா தேவி கூறும்போது, “நான் ஏற்கெனவே வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறேன், இந்த முறையும் என்னால் வெள்ளிப் பதக்கம் மட்டுமே வெல்ல முடிந்தது. இந்திய மக்களுக்கு என்னால் தங்கப் பதக்கத்தை வழங்க முடியவில்லை. எல்லோரும் விரும்பியதை என்னால் கொடுக்க முடியவில்லை. நான் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இங்கு வந்ததில் நிறைய குழப்பங்கள் இருந்தன. பயிற்சி பெறுவதற்கு எனக்கு அதிக நேரம் கிடைக்கவில்லை. செப்டம்பர் 10-ம் தேதிதான் அணியில் நான் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதனால் அதிகம் பயிற்சி செய்யாமல் நேரடியாக மணிப்பூரில் இருந்து இங்கு வந்தேன். ஆனால், பயிற்சியாளர் அமித் பால் இறுதிப் போட்டி வரை நான் முன்னேறுவதற்கு மிகவும் உதவினார். வரவிருக்கும் போட்டிகளில் என்னால் முடிந்தவரை சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு திரும்புவேன்” என்றார்.
ரோஷிபினா தேவி கடைசி நேரத்தில்தான் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். முதலில் திவ்யான்ஷி சவுத்ரியே தேர்வு செய்யப்பட்டு இருந்தார். கடந்த ஜூன் மாதம் ஸ்ரீநகரில் நடைபெற்ற வீராங்கனைகள் தேர்வில் திவ்யான்ஷியிடம், ரோஷிபினா தேவி தோல்வி அடைந்திருந்தார். ஆசிய விளையாட்டு போட்டி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் திவ்யான்ஷி திடீரென காயம் அடைந்தார். இதன் காரணமாக அவருக்கு பதிலாக ரோஷிபினா தேவி தேர்வானார்.
வுஷு என்றால் என்ன?
வுஷு விளையாட்டு என்பது இரண்டு வீரர்களுக்கு இடையே நடைபெறும் நேரடி மல்யுத்தம் மற்றும் குத்துச்சண்டை கலந்த மோதலாகும். இதில் குத்துவது, உதைப்பது மற்றும் எதிரியைத் தூக்கி எறிவது போன்ற நுட்பங்கள் பயன்படுத்தப்படும். இந்த விளையாட்டு சீனாவின் தற்காப்பு கலைகளில் இருந்து தோன்றியதாகும்.