லிஸ்பன்: இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணி வீரர்களை (கால்பந்து களத்தில்) துவம்சம் செய்யும் இயந்திரமாகவே திகழ்வார். அவர் களத்தில் இருக்கும் வரை, எதிரிகளுக்கு ஆபத்து எப்போதும் காத்திருக்கும் என்று என்று போர்ச்சுகல் அணியின் முன்னாள் கோல்கீப்பர் ரிகார்டோ பெரைரா தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய 3 நாடுகளில் 2026-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டி வரும் 11-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் போர்ச்சுகல் நட்சத்திர வீரர் ரொனால்டோ, 7-வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையைப் பெறவுள்ளார்.
அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸிக்கும் இது 7-வது உலகக் கோப்பை போட்டியாகும். போர்ச்சுகல் அணியின் கோல்கீப்பராக இருந்த ரிகார்டோ தற்போது பயிற்சியாளராக மாறி வீரர்களுக்கு பயிற்சியைத் தந்து வருகிறார்.
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து, சக அணியின் முன்னாள் வீரர் ரிகார்டோ நேற்று கூறியதாவது: நான் பார்த்த மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஒருவர். அவர் களத்தில் இறங்கிவிட்டால் அழிக்கும் இயந்திரம் போன்று செயல்படுவார். அவர் களத்தில் இருந்தால் எதிரணி வீரர்களுக்கு ஆபத்துதான். இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அபாயகரமான வீரராக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.
இக்கட்டான போட்டிகளின்போது அதிவேகத்தில் செயல்பட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர் ரொனால்டோ. கால்பந்து மைதானத்தில அவரது அர்ப்பணிப்பு, ஈடுபாடு, பேரார்வம் ஆகியவை மாறாமல் அப்படியே இருக்கின்றன. அவரது வேகம் சற்று குறைந்திருந்தாலும், அது மணிக்கு 200 கிலோ மீட்டரிலிருந்து 195 கிலோ மீட்டருக்கு மட்டுமே குறைந்திருக்கிறது.
அணி வீரர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். சக அணி வீரர்கள் நலமாக உள்ளனரா, உடற்தகுதியுடன் உள்ளனரா என்று விசாரிக்கும் அதே அக்கறை அவரிடம் இப்போதும் நீடிக்கிறது. இந்த செயல்பாடுகள் அவரிடம் நீடிக்கும் வரை, கிறிஸ்டியானோ ரொனால்டோ எதிரணி வீரர்களை (கால்பந்து களத்தில்) துவம்சம் செய்யும் இயந்திரமாகவே திகழ்வார்.
அவர் களத்தில் இருக்கும் வரை, எதிரிகளுக்கு ஆபத்து எப்போதும் காத்திருக்கும். அவரை வர்ணிக்க இனி வார்த்தைகளே இல்லை. ஏனெனில், அவர் மீண்டும் ஒருமுறை உருவாக வாய்ப்பே இல்லாத அளவுக்கு மிகவும் தனித்துவமான ஒரு மனிதர். இவ்வாறு ரிகார்டோ தெரிவித்தார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் போர்ச்சுகல் அணி குரூப் கே-வில் காங்கோ, உஸ்பெகிஸ்தான், கொலம்பியா ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. ஜூன் 17-ம் தேதி காங்கோ அணிக்கெதிராக முதல் போட்டியில் போர்ச்சுகல் அணி விளையாடவுள்ளது.
ஜூன் 23-ம் தேதி உஸ்பெகிஸ்தானுடனும், 27-ல் கொலம்பியா அணிக்கெதிராகவும் போர்ச்சுகல் அணி களமிறங்கவுள்ளது. உலகக் கோப்பை போட்டிக்குத் தயாராவதற்காக, போர்ச்சுகல் அணி ஜூன் 6-ம் தேதி சிலியுடனும், ஜூன் 10-ம் தேதி நைஜீரியாவுடனும் நட்பு ஆட்டங்களில் விளையாட உள்ளது.