விளையாட்டு

வெற்றிக் கூட்டணியை உடைத்து ரிஷப் பண்ட் செய்த மாபெரும் தவறு!

ஆர்.முத்துக்குமார்

ஐபிஎல் 2026 தொடரில் தொடக்கத்தில் இறங்கிய மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம் ஜோடி விளையாடிய சிறந்த ஓப்பனிங் கூட்டணியை ரிஷப் பண்ட் மறந்து விட்டார் போல் தெரிகிறது. சிறந்த ஜோடியைப் பிரித்து தான் ஓப்பனிங் இறங்கி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆக போட்டியே திசை மாறியதுதான் நேற்று லக்னோ அணிக்கு நடந்தது.

ஐபிஎல் 2026 தொடரில் தொடக்கத்தில் இறங்கிய மிட்செல் மார்ஷ் 13 இன்னிங்ஸ்களில் 627 ரன்களை 48.23 என்ற சராசரியில் 163 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார். எய்டன் மார்க்ரம் 13 இன்னிங்ஸ்களில் 445 ரன்களை 148 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

          

இவர்கள் இருவரையும் தொடக்க ஜோடியாக இறக்காமல் தான் இறங்கி சொதப்பி விட்டார் ரிஷப் பண்ட். வெற்றிக் கூட்டணியை எப்போதும் உடைக்கக் கூடாது, இந்திய அணியில் கவுதம் கம்பீர் இதே போன்ற எண்ணற்ற தவறுகளைச் செய்து வருகிறார், ஆனால் அவர் அதிர்ஷ்டம் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றது. மார்க்ரம் கடந்த சீசனில் 5 அதிரடி அரைசதங்கள் எடுத்தார்.

இவர்கள் இருவரும் இறங்கிக் கொடுத்த அதிரடிக் கூட்டணி இன்னிங்ஸ்களில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக 10.3 ஓவர்களில் 115 ரன்கள் எடுத்ததைக் குறிப்பிடலாம். மார்க்ரம்-மிட்செல் மார்ஷ் ஜோடி இணைந்து 11 இன்னிங்ஸ்களில் 483 ரன்களை ஜோடியாக எடுத்துள்ளனர். மாறாக ரிஷப் பண்ட் கடந்த ஐபிஎல் தொடரில் 14 இன்னிங்ஸ்களில் 269 ரன்களை 133 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அவ்வளவே.

இந்நிலையில் ரிஷப் பண்ட் ஓப்பனிங் இறங்கலாமா? வெற்றிக்கூட்டணியைத் தக்க வைக்க வேண்டியதுதானே என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நேற்று முகேஷ் குமார், மிட்செல் மார்ஷ் அடித்த ஷாட்டை உண்மையில் கேட்ச் ஆக்கியிருக்க வேண்டும் ஆனால் பந்து அவர் கையில் பட்டு ஸ்டம்பில் பட ரிஷப் பண்ட் கிரீசுக்கு வெளியே நின்றிருந்ததால் ரன் அவுட் ஆனார். ஆனாலும் ஆடிய 9 பந்துகளில் 7 ரன்கள் என்பது நவீன டி20 வகையறா தொடக்கம் அல்ல.

வெற்றிக்கூட்டணியை மாற்றியதால் எய்டன் மார்க்ரம் 11 ரன்களில் அக்சர் படேலிடம் பவுல்டு ஆக லக்னோ சரிவடைந்து எழும்பவில்லை. 141 ரன்களில் மடிந்தது. குறிப்பாக நடராஜன் அருமையாக வீசினார். லுங்கி இங்கிடி புதுவித ஸ்லோ பந்துகளில் பிரபலமாகி வருகிறார், இவரும் 3 விக்கெட். டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோசமாகத் தொடங்கியது முகமது ஷமியை ட்ரைவ் ஆடப்போய் ராகுல் டக் அவுட் ஆனார்.

பிரின்ஸ் யாதவ் பந்தில் நிஷாங்கா வெளியேற இதே பிரின்ஸ் யாதவ் அற்புதமான இன்ஸ்விங்கர் மூலம் அக்சரின் குச்சியைப் பெயர்த்தார். நிதிஷ் ராணாவை மோசின் கான் காலி செய்ய 26/4 என்று தோல்வி முகம் காட்டியது. பிரின்ஸ் யாதவ், ஷமி, மோசின் கான் ஓவர்களுக்குப் பிறகே ஸ்பின் வந்தவுடன் ஆட்டம் மாறிப்போனது. 13 பந்துகள்தான் ஸ்பின் பயன்படுத்தப்பட்டது ஆனால் அதில் 35 ரன்கள் விளாசப்பட்டதில் ஆட்டத்தின் திசை மாறிப்போனது.

ரிஸ்வி இதில் 4 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது. ரிஸ்வி 70 நாட் அவுட், ஸ்டப்ஸ் 39 நாட் அவுட் இருவரும் சேர்ந்து ஆட்டமிழக்காமல் 119 ரன்களை 12 ஓவர்களில் சேர்த்து வெற்றி பெறச் செய்தனர். ரிஷப் பண்ட் தொடர்ந்து ஓப்பனிங் இறங்குவாரா அல்லது 2025 வெற்றிக்கூட்டணியான மார்ஷ்-மார்க்ரம் கூட்டணிக்குத் திரும்புவாரா என்பதை அடுத்தடுத்தப் போட்டிகளில்தான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT