நாக்பூரில் நேற்று நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இழந்ததற்கு மருந்து தடவுவது போல் அபிஷேக் சர்மாவும் ரிங்கு சிங்கும் நியூஸிலாந்து பந்து வீச்சைப் புரட்டி எடுத்தது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்தது.
அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 8 சிக்சர்களுடன் 84 ரன்களை விளாசினார். ஆனால் இந்த இன்னிங்ஸின் ஸ்பெஷாலிட்டி என்னவெனில் டி20 பேட்டிங் நவீன ஆயுதங்களான ஸ்கூப் ஷாட், ரேம்ப் ஷாட், ரிவர்ஸ் ஹிட், சுவிட்ச் ஹிட் போன்றவற்றை அதிகம் பயன்படுத்தாமல் அபிஷேக் சர்மா ஒரு பெரிய டி20 ஜாம்பவானாக வளர்ந்து வருகிறார். அபிஷேக் சர்மாவின் டி20 சர்வதேச போட்டிகளின் ஸ்ட்ரைக் ரேட் 191.
ரிங்கு சிங் தேவையில்லாமல் இந்திய டி20, ஒருநாள் போட்டி அணியிலிருந்து கம்பீர் அண்ட் கோ-வினால் ஒழிக்கப்பட்டார். ஆனால் இப்போது தோனி போன பிறகே தான் ஒரு பெரிய பினிஷர் என்ற அறிவிப்பை தன் நேற்றைய கம் பேக் இன்னிங்ஸ் மூலம் கம்பீர் அண்ட் கோ-விற்கு உணர்த்தியுள்ளார் ரிங்கு.
ரிங்கு நேற்று 20 பந்துகளில் 44 ரன்களை விளாசினார், அதுவும் கடைசி 20-வது ஓவரில் டேரில் மிட்செலை 2 சிக்சர்களுடன் 21 ரன்கள் விளாசி அதியற்புதமாக ஒரு பினிஷிங்கை செய்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் ஒட்டுமொத்தமாக 165. இவரும் டி20-க்கு உரிய பிரத்யேக ஷாட்களை ஆடாமலேயேதான் இத்தகைய ஒரு ஸ்ட்ரைக் ரேட்டை பராமரித்து வருகிறார்.
அதுவும் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ தரவுகளின் படி கடைசி 2 ஓவர்களில் ரிங்குவை விட அதிவேகமாக அடிக்கும் வீரர் உலகில் இல்லை என்பதே தகவல். சூரியகுமார் யாதவ் 20வது ஓவர் வரை நின்றால் அவரது ஸ்ட்ரைக் ரேட் ரிங்குவை விட நன்றாக உள்ளது, ஆனால் நன்றாக செட்டில் ஆன பிறகு விளாசுவது வேறு, ரிங்குவைப் போல் கடைசியில் இறங்கி அந்த ரன் விகிதத்தை மேலும் உயர்த்துவது வேறு. அபிஷேக் சர்மா இப்போது அணியின் இன்றியமையா வீரராகத் திகழ்கையில் ரிங்கு சிங்கோ அணியில் தேர்வு செய்யப்படாமல் ஒழிக்கப்பட்டு வந்தார். இப்போது மீண்டும் ஒரு கம்பேக் கொடுத்து டி20 உலகக்கோப்பைக்குத் தான் தயார் என்பதை அறிவித்துள்ளார்.
நேற்று ரிங்கு இறங்கும் போது 13.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. பொதுவாக தோனியின் அறிவுரையின் படி அமைதியாக கிரீசில் இருந்து சாதிக்கும் ரிங்கு, நேற்று உண்மையில் தான் யார் என்று நிரூபிக்க வேண்டிய இக்கட்டில் இறங்கினார். “டீமில் இல்லாமல் நீண்ட இடைவேளைக்குப் பிறகு வந்து ஆடுவது உண்மையில் என் மீது அழுத்தம் ஏற்படுத்தியது” என்று அவரே நேற்று கூறினார்.
நேற்றைய இந்திய அணி சரியான ஒரு காம்பினேஷனாக அமைந்தது, இந்த அணியையே ரிங்கு சிங்குடன் அப்படியே டி20 உலகக்கோப்பையிலும் ஆடச்செய்தால் பலன் நிச்சயம்.