பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மகளிர் அணிக்கான சீருடை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.
4-வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் வரும் 9-ம் தேதி முதல் பிப்ரவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் 3 டபிள்யூபிஎல் சீசன்களில் முறையே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளன.
இந்த தொடரில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யூ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய சீருடையை ஆர்சிபி மகளிர் அணி நேற்று வெளியிட்டுள்ளது. புதிய சீருடையை அந்த அணியின் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இதுதொடர்பான புகைப்படங்களை ஆர்சிபி அணியின் சமூக வலைதள பக்கத்தில் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.